செல்வங்களை அருளும் விரதம்

பத்ரச்ரவஸ் என்ற மன்னன், சுரசந்திரிகா தம்பதியரின் மகள் சியாமபாலா. பத்ரச்ரவஸ் மிகச்சிறந்த விஷ்ணு பக்தன். இவன் தனது மகளை சக்கரவர்த்தியான மாலாதரனுக்கு திருமணம் செய்து கொடுத்தான். ஒரு முறை மகாலட்சுமி வயதான சுமங்கலி வேடத்தில், சுரசந்திரிகா அரண்மனைக்கு வந்தாள்.

சுரசந்திரிகாவிடம் வரலட்சுமி விரதத்தைப் பற்றி விரிவாக கூறி அதை கடைப்பிடிக்கும் படி கூறினாள். மகளை பிரிந்த ஏக்கத்தில் இருந்த சுரசந்திரிகா, லட்சுமி தேவியை யாரோ என்று கருதி விரட்டி விட்டாள். லட்சுமி தேவியை விரட்டியதால், சுரசந்திரிகாவும், பத்ரச்ரவஸ் மன்னனும் செல்வங்களை இழந்து, நாட்டையும் இழந்து வறுமை நிலைக்குச் சென்றனர்.

இதைக்கேள்வி பட்ட சியாமபாலா, லட்சுமி தேவியை சமாதானப்படுத்தி, அவரிடம் இருந்து வரலட்சுமி விரத முறைகளை விரிவாக கேட்டு தெரிந்து கொண்டாள். பின்னர் பக்தியுடன் அந்த விரதத்தை கடைப்பிடித்தாள். விரத மகிமையில் அவள் செல்வச் சிறப்பை அடைந்தாள்.

லட்சுமி தேவியை அவமானப்படுத்திய அவளது பெற்றோரும், அந்த விரதத்தை கடைப்பிடித்தனர். அதன் பிறகு சுரசந்திரிகா தான் இழந்த செல்வங்களை மீண்டும் பெற்றாள்.