அப்பல்லோவில் 50 வது நாள்… ஒருவாரத்தில் ஜெ., டிஸ்சார்ஜ்- ரிச்சர்ட் பீலே நம்பிக்கை

முதல்வர் ஜெயலலிதா இன்னும் ஒரு வாரத்தில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்று அவருக்கு சிகிச்சை அளித்த லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் பீலே கூறியதாக லண்டன் வாழ் தமிழர்கள் கூறியுள்ளனர்.

அதிமுக பொதுச் செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா, உடல்நலக்குறைவு காரணமாக கடந்த செப்டம்பர் மாதம் 22ம் தேதி இரவு சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

இன்னும் ஒருவாரத்தில் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்று ஜெயலலிதாவிற்கு சிகிச்சை அளித்த லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் பீலே கூறியுள்ளார்.

50வது நாளாக அவர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார் ஜெயலலிதா. முதல்வர் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த லண்டன் டாக்டர் ரிச்சர்டு ஜான் பீலே, எய்ம்ஸ் டாக்டர்கள் குழுவினர் திரும்பி சென்றுவிட்டனர்.

தற்போது, சிங்கப்பூர் பிசியோதெரபி நிபுணர்களான சீமா, ஜூடி ஆகியோர் அவருக்கு பிசியோதெரபி மூலம் உடற்பயிற்சி அளித்து வருகின்றனர்.

தற்போது, முதல்வர் எழுந்து நடக்க பயிற்சி பெற்று வருகிறார். இதை கேள்விப்பட்டு தொண்டர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். முதல்வர் விரைவில் வீடு திரும்புவார் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

செயற்கை மூச்சு குழாய் கருவியும் அவ்வப்போது அகற்றப்பட்டு, இயற்கையாகவே சுவாசம் மேற்கொள்கிறார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

செவ்வாய்கிழமையன்று 8 மணி நேரத்துக்கும் மேல் இயற்கையாகவே ஜெயலலிதா சுவாசித்தார். நேற்றும் அதுபோலவே தொடர்ந்து அவர் சுவாசம் மேற்கொண்டார் என்றும் மருத்துவமனை வட்டார தகவல்கள் தெரிவித்தார்.

அப்பல்லோ மருத்துவமனையில் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சிகிச்சையளித்து வரும் லண்டன் டாக்டர் ரிச்சர்ட் பிலேவை லண்டனில் உள்ள செயிண்ட் தாமஸ் மருத்துவமனையில் பிரிட்டன் வாழ்தமிழர்கள் சந்தித்து பேசினர்.

அப்போது அவர்களுடன் பேசிய லண்டன் டாக்டர் ரிச்சர்ட் பிலே முதல்வருக்கு சிகிச்சையளிக்க வாய்ப்பு கிடைத்தமைக்காக பெருமையடைகிறேன் என்று பெருமிதத்தோடு தெரிவித்தார்.

முதல்வர் ஜெயலலிதா மீதான தமிழக மக்கள் கொண்டுள்ள அபரிமிதமான அன்பு தம்மை வியக்க வைப்பதாகவும் தெரிவித்தார். முதல்வரின் சிகிச்சை பற்றி விவரித்த அவர், இன்னும் ஒருவாரத்தில் பூரண குணமடைந்து வீடு திரும்புவார் என்று தெரிவித்துள்ளார்.

இந்த அறிவிப்பு அதிமுக தொண்டர்களை சற்றே ஆறுதல் படுத்தியுள்ளது.

அப்பல்லோ வாசலில் டிவி செய்தி வாசிப்பாளர் பாத்திமா பாபு உள்ளிட்டோர் தினசரியும் வந்து பூஜை செய்து வருகின்றனர். 50 நாளாக இன்றும் ஏராளமான அதிமுகவினர் வந்து முதல்வர் எப்போது வருவார் என்று கேட்டுக்கொண்டிருந்தனர்.

அதிமுகவினர் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் முதல்வர் ஜெயலலிதா பரிபூரணமாக குணமடைந்து விட்டதாகவும், விரைவில் அவர் வீடு திரும்புவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீபாவளிக்குத்தான் வீட்டிற்கு வரவில்லை இடைத்தேர்தலுக்கு முன்பாக ஜெயலலிதா வீடு திரும்புவார் என்று தகவல் வெளியாகியுள்ளது.