அரசாங்கத்தினால் நேற்று முன்வைக்கப்பட்ட வரவு செலவுத் திட்டம் தொடர்பில் வெவ்வேறு கருத்துகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் வரவு செலவுத் திட்டம் அடிப்படையற்றது என்று நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
மீண்டும் அதிக அளவான வரிவிதிப்புகள் இடம்பெற்றுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, குறித்த வரவு செலவுத்திட்டம் மக்கள் சார்பானதாகவும், பொதுவாக நன்மைப் பயக்கும் வகையிலும் அமைந்துள்ளதாக எதிர்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் கூறியுள்ளார்.
அத்துடன் இதன் ஊடாக வடக்கு மக்களின் தேவைகளும் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்க உறுப்பினர்களால் இந்த வரவு செலவுத்திட்டம் வரவேற்கப்பட்டுள்ளது.
அடிப்படையற்றது என்ற கருத்தை நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த முன் வைத்துள்ளது சிலர் மத்தியில் பல கேள்விகளை எழுப்பியுள்ளது.
ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி ஆகியவற்றின் உறுப்பினர்களது யோசனைகளின் கலப்பாக இந்த வரவு செலவுத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
இதேநேரம் வரவு செலவுத் திட்டமானது, நாட்டின் பொருளாதாரத்தை மீண்டும் சரியான பாதையில் இட்டுச் செல்லும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளதாக பிரதி வெளிவிவகார அமைச்சர் ஹர்ச டி சில்வா குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் பொது மற்றும் தனியார் துறைகளுடன் நாடு எவ்வாறு முன்னேறும் என்பதை இந்த வரவு செலவுத்திட்டம் தெளிவாக சுட்டிக்காட்டி இருப்பதாக அவர் கூறியுள்ளார்.
எவ்வாறாயினும் பொது மக்களின் வருமான மட்டம் எவ்வாறான வகைகளில் உயர்த்தப்படும் என்பதை இந்த வரவு செலவுத்திட்டம் தெளிவாக கூறவில்லை என்று தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் இதனைத் தெரிவித்துள்ளார்.
மேலும் வரவு செலவுத்திட்டத்தி கூறப்பட்டுள்ள சில வாழ்வாதர வேலைத்திட்டங்கள் தொடர்பில் தெளிவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் சில அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளமை குறித்து அவர் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
பல்வேறு தரப்பினரால் முன்வைக்கப்பட்ட யோசனைகளும், கோரிக்கைகளும் புறக்கணிக்கப்பட்டுள்ளன.