ஆவா குழுவுடன் தொடர்புடைய இராணுவத்தினர் கைது செய்யப்பட்டார்களா? : ஊடகவியலாளர்களின் கேள்விக்கு பேச்சாளர் தகவல்

ஆவா குழுவில் செயற்பட்டார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் எந்த  இராணுவ அதிகாரியும் இதுவரை கைது செய்யப்படவில்லை. அவ்வாறு எமக்கு அறிவிக்கப்படவில்லை என்று  இராணுவ பேச்சாளர் பிரிகெடியர் ரொஷான் செனவிரட்ன தெரிவித்தார்.

அரசாங்கத் தகவல் திணைக்களத்தில்  இன்று நடைபெற்ற  வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும்  செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு  கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர்  அங்கு எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கையில்:-

கேள்வி:- ஆவா குழுவில் செயற்பட்டார்கள் என்ற சந்தேகத்தில்  இராணுவத்தினர் யாராவது கைதுசெய்யப்பட்டார்களா?

பதில்:- இதுவரை அவ்வாறு எதுவும் எமக்கு அறிவிக்கப்படவில்லை.  அவ்வாறு கைது செய்யப்பட்டால் எமக்கு அறிவிக்கப்படவேண்டும்.

கேள்வி:- கடந்த மூன்று தினங்களாக ஊடகங்களில் இராணுவத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டதாக கூறப்படுகின்றதே?

பதில்:- அது தொடர்பில் எமக்கு  அறிவிக்கப்படவில்லை

கேள்வி:-  குற்றப்புலனாய்வுப்பிரிவு இது தொடர்பில் நீதிமன்றத்தில் அறிவித்துள்ளதாக கூறப்படுகின்றதே?

பதில்:- எமக்கு அறிவிக்கப்படவில்லை.

கேள்வி:- அப்படியாயின் சி.ஐ.டி. பொய் கூறுகிறதா?

பதில்:- எமக்கு அறிவிக்கப்படவில்லை என்றே நான் கூறுகின்றேன்.  அவ்வாறு  கைதுசெய்யப்பட்டிருந்தால்  அது தொடர்பில் முறையாக எமக்கு அறிவிக்கப்படும்.

கேள்வி:-  இவ்வாறு கைதுகள் இடம்பெற்றபின்னர்   ஆவா குழுவின் சம்பவங்கள் குறைவடைந்துள்ளதா?

பதில்:- அதனை  நீங்கள்  சட்டம் ஒழுங்கை நிர்வகிக்கும்  பொலிஸாரிடம் கேட்கவேண்டும்.