தெலங்கானா மாநிலம், ராமனந்தபுர் பகுதி இளைஞர் ஒருவர் தூக்கு கயிறுடன் செல்பி எடுத்த பின்னர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட பரிதாப சம்பவம் அனைத்து தரப்பு மக்களிடையே அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
நல்கொண்டா மாவட்டத்தைச் சேர்ந்த கிராந்தி குமார் என்ற அந்த இளைஞர் வேன் ஓட்டுனராக பணியாற்றி வந்துள்ளார். அந்த இளைஞர் மேற்கூரை விசிறியில் தூக்கிட்டு வியாழன்று தற்கொலை செய்துள்ளார். அதற்கு முன்பாக தனது கழுத்தில் தூக்கு கயிறுடன் செஃல்பி எடுத்து அவரது கைப்பேசியில் வைத்துள்ளார்.
இந்நிலையில், கிராந்தி குமார் தற்கொலை செய்துகொண்டது குறித்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ஹைதராபாத் போலீசார் அவரது கைப்பேசியை ஆய்வு செய்தனர். அதில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு கிராந்தி குமார் தூக்கு கயிறுடன் செஃல்பி எடுத்துக் கொண்ட படம் இருந்துள்ளது. மேலும், அவர் எழுதி வைத்திருந்த கடிதமும் சட்டைப் பையில் இருந்து கைப்பற்றப்பட்டது. அதில் நிதி நெருக்கடி மற்றும் குடும்ப பிரச்னை காரணமாக தற்கொலை செய்து கொண்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து ஹைதராபாத் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.