இந்தியாவில் 500, 1000 ரூபாய் தடை செய்யப்பட்டுள்ளதால், கணவரின் அறுவை சிகிச்சைக்காக கையில் பணம் வைத்திருந்தும் வங்கி வங்கியாக அலையும் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார் அவரது மனைவி.
மும்பை தஹிசார் பகுதியைச் சேர்ந்தவர் மேனன், இவரது கணவருக்கு சிறுநீரகக் கற்கள் காரணமாக அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டியுள்ளது. இதனால், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில் மத்திய அரசு தற்போது மேற்கொண்டுள்ள அதிரடி நடவடிக்கையாக பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இதற்கு மாற்று வழியாக வங்கிகளுக்குச் சென்று புதிய 500, 2000 ரூபாய் நோட்டுகளை பெற்றுக் கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மேனன் தன்னிடம் உள்ள பழைய நோட்டுகளை மாற்றுவதற்காக வங்கி வங்கியாக அழைந்து கொண்டிருக்கிறாராம்.
அவர் கூறுகையில், எனது கணவரின் உடல்நிலை மிகவும் மோசமான நிலையை அடைந்துள்ளது. அவருக்கு கண்டிப்பாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என மருத்துவர் கூறியுள்ளார்.
ஆனால், கையில் பணம் இல்லை, மூன்று வங்கிகளில் பணம் இருந்தும் எடுக்க முடியவில்லை. ஒரு வங்கியில் பணம் இல்லை என்று கூறி மதிய உணவு இடைவேளைக்கு முன்னரே அடைத்து விட்டனர்.
மற்றொரு வங்கியில் கூட்டம் காரணமாக மதியம் 2 மணிக்கு மேல் தான் டோக்கன் வழங்கப்படும் என்கின்றனர்.
இவ்வாறு நான் ஒவ்வொரு வங்கியாக அலைந்து எனது கணவரின் உயிரை காப்பாற்ற முடியாமல் போய்விடுமோ என பயமாக உள்ளது என வேதனை தெரிவித்துள்ளார்.