சிவனுக்கு உகந்த பிரதோஷம் பற்றி அரிய தகவல்கள்

குற்றமற்ற நேரம் :

தோஷம் என்றால் குற்றம் என்று பொருள். பிரதோஷம் என்றால் குற்றமற்ற என்று அர்த்தம். அந்த குற்றமற்ற நேரத்தில் இறைவனை வழிபடுவது சிறப்பு. ஆகவேதான் பிரதோஷ வழிபாட்டுக்கு மகத்துவம் அதிகம். சனிக்கிழமையில் வரும் பிரதோஷம் அன்று சிவாலயங்களுக்குச் சென்று வழிபாடு செய்தால், 140 பிரதோஷ வழிபாடுகளில் கலந்துகொண்ட புண்ணியம் கிடைக்கும் என்பது சிவனடியார்களின் வாக்காகும்.

சனிப் பிரதோஷம் :

எல்லா பிரதோஷங்களையும் விட சனிக்கிழமை வரும் பிரதோஷம் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படு கிறது. அதுவும் கிருஷ்ணபட்ச (தேய்பிறை) சனிக் கிழமையில் வந்தால் அது ‘மகாப் பிரதோஷம்’ என்று அழைக்கப்படுகிறது. சாதாரண பிரதோஷ வேளைகளில் சிவாலயம் சென்று வழிபட்டால், ஒரு வருடம் ஆலயம் சென்று இறைவழிபாடு செய்த பலன் கிடைக்கும். அதுவே சனிக்கிழமை வரும் மகாப் பிரதோஷத்தன்று இறைவனை வழிபட்டால், 5 வருடம் ஆலய வழிபாடு செய்த பலன் கிட்டும் என்பது நம்பிக்கை.

சிறப்பு தரும் பால் அபிஷேகம் :

சிவபெருமான் அபிஷேகப் பிரியர். அவருக்கு பிரதோஷத்தன்று கறந்த பசும்பால் கொண்டு அபிஷேகம் செய்து வழிபட்டால் சிறப்பான பலனைப் பெறலாம். இல்லையென்றால் இளநீர் அபிஷேகம் செய்வது நல்லது. இறைவன் இயற்கையை விரும்பக் கூடியவன். எனவே இயற்கையான வில்வ இலை அர்ச்சனையும் சிவபெருமானை மகிழ்ச்சிப்படுத்தும். இது தவிர தும்பைப் பூ மாலை அணிவித்து பிரதோஷம் அன்று, சிவனை வழிபட்டால் சகல தோஷங்களும் விலகும்.

13 வகை அபிஷேகம் :

சேலம் ஆத்தூரில் இருந்து கள்ளக்குறிச்சி செல்லும் சாலையில் அம்மையகரம் என்ற ஊர் உள்ளது. இங்கிருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது சொர்ணபுரீஸ்வரர் திருக்கோவில். பஞ்ச பூத தலங்களுக்கு இணையான ஆலயமாக இது கருதப்படுகிறது. இந்த ஆலயத்தின் கருவறையின் மையத்தில் ஒரு தீபம் துடிப்புடன் எரிந்து கொண்டிருக்கிறது. தேன், பால், தயிர், இளநீர், நெய், அரிசிமாவு, நல்லெண்ணெய், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 13 மூன்று வகை பொருட்களால் இத்தல சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்கிறார்கள்.

வேடனாக சிவன் :

புதுச்சேரி மாநிலம் காரைக்கால் அருகில் உள்ளது திருவேட்டக்குடி. பாண்டவர்களில் ஒருவரான அர்ச்சுனனுக்கு, சிவபெருமான் அருள்புரிந்த தலங்களில் இதுவும் ஒன்று. தேவாரப்பாடல் பெற்ற திருத்தலமாக விளங்கும் இந்த ஆலயத்தில் உள்ள இறைவன் ‘திருமேனி அழகர்’ என்றும், இறைவி ‘காந்த நாயகி’ என்றும் பெயர் பெற்றுள்ளார்கள். இந்த ஆலயத்தில் சிவபெருமான் வேடனாகவும், அம்பிகை வேடுவச்சியாகவும் ஐம்பொன் சிலை வடிவில் காட்சி அளிக்கிறார்கள். மாசி மாதம் மகம் நட்சத்திரம் அன்று, அர்ச்சுனனுக்கு சிவபெருமான் வேடனாக காட்சி தந்த விழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது.