இன்றைக்கு நம்மிடையே பரவியுள்ள நோய்களில் மிக மோசமான, சீக்கிரம் அழியாத, அழிக்கவும் முடியாத நோய்- சந்தேகம். இன்று இது பாரெங்கும் பரந்து விரிந்து எல்லாத்தடங்களிலும் பெரும் தடைக்கல்லாய் இருந்து வருகிறது. இந்நோய் குடிகொண்டிருக்கும் வரை தேகமும், தேசமும் ஆரோக்கியம் பெறுவது கடினமே!
‘இதனை (ஒருவரிடமிருந்து ஒருவராக) உங்கள் நாவுகளால் எடுத்து( சொல்லி)க் கொண்டு, உங்களுக்குத் (திட்டமாக) அறிவில்லாத ஒன்றைப் பற்றி உங்கள் வாய்களால் கூறித்திரிகின்றீர்கள்; இன்னும் இதை நீங்கள் லேசானதாகவும் எண்ணி விட்டீர்கள். ஆனால் அது அல்லாஹ்விடத்தில் மிகப்பெரிய(பாவமான)தாக இருக்கும்’ (24:15) என்கிறது திருக்குர்ஆன்.
பேச்சு என்பது இறைவன் நமக்கு மட்டுமே கொடுத்த மாபெரும் அருட்கொடை. அதை நாம் வீணாகப் பயன்படுத்தக்கூடாது. குறிப்பாக வீண் சந்தேகம், வதந்தி, பொய் போன்றவற்றை பேசி நமது பொன்னான மூச்சையும், பேச்சையும், காலத்தையும் பாழ்படுத்தி விடக்கூடாது என்பதையே மேற்கண்ட வசனம் மெய்ப்பிக்கிறது.
அத்துடன், ‘அவ்வாறு செய்தால் அது ஒரு பெரும்பாவச் செயல்’ என்றும் திருக்குர்ஆன் எச்சரிக்கிறது.
இதற்கும் மேலாக நமக்கு வரும் செய்திகளிலும் நாம் மிகுந்த விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்று பின்வரும் வசனம் வாசித்துக்காட்டுகிறது இப்படி:
‘ஒவ்வொரு தகவலுக்கும் ஒரு குறிப்பிட்ட காலமுண்டு; (அதனை) நீங்கள் சீக்கிரமே அறிந்து கொள்வீர்கள்’ (6:67).
‘இறைவிசுவாசிகளே! தீயவன் எவனும் உங்களிடம் ஒரு செய்தியை கொண்டு வந்தால், அதைத் தீர்க்கமாக விசாரித்துக்கொள்ளுங்கள்; (இல்லையேல்) அறியாமையினால் (குற்ற மற்ற) ஒரு சமூகத்தாருக்கு நீங்கள் தீங்கு செய்து விடலாம்; பின்னர் நீங்கள் செய்தவை பற்றி நீங்களே கைசேதப்படுபவர்களாக (கவலைப்படுபவர்களாக) ஆவீர்கள்’. (49:6)
வீசிய கற்களை அள்ளி விடலாம், ஆனால் பேசிய சொற்களை அள்ளமுடியுமா? எனவே நாம் நமது பேச்சுகளில் மிகமிக கவனமாக இருக்க வேண்டும்.
குறிப்பாக நமது எண்ணங்களில் ஏற்படும் சந்தேகங்களை உடனடியாக பேச்சாக மாற்றிவிடக்கூடாது. அவ்வாறு செய்தால் அது நட்பு, உறவு, குடும்பம் மற்றும் சமூகங்களுக்கு இடையே அணைக்கவே முடியாத அளவுக்கு பெரும் தீப்பிழம்பை ஏற்படுத்தி விடுகிறது.
சந்தேகம் என்பது ஏதோ ஒரு சூழலில் எல்லோருக்கும் ஏற்படலாம். அதை நாம் உடனுக்குடன் நீக்க முன்வரவேண்டும். இதையே திருக்குர்ஆன் இவ்வாறு வலியுறுத்துகிறது:
‘முஃமின்களே! (சந்தேகமான) பல எண்ணங்களிலிருந்து விலகிக்கொள்ளுங்கள்; ஏனெனில் நிச்சயமாக எண்ணங்களில் சில பாவங்களாக இருக்கும்; (பிறர் குறைகளை) நீங்கள் துருவித் துருவி ஆராய்ந்து கொண்டிராதீர்கள்; அன்றியும், உங்களில் சிலர் சிலரைப் பற்றிப் புறம் பேசவேண்டாம், உங்களில் எவராவது தம்முடைய இறந்த சகோதரனின் மாமிசத்தைப் புசிக்க விரும்புவாரா? (இல்லை) அதனை நீங்கள் வெறுப்பீர்கள். இன்னும், நீங்கள் அல்லாஹ்வை அஞ்சுங்கள். நிச்சயமாக பாவத்திலிருந்து மீள்வதை அல்லாஹ் ஏற்றுக்கொள்பவன்; மிக்க கிருபை செய்பவன்’. (49:12)
தீய சூழல்கள் தான் தீய எண்ணங்களை உருவாக்குகின்றன. அதில் சந்தேகமும் ஒன்று என்பதை இந்த திருக்குர்ஆன் வசனம் விளக்குகிறது.
மேலும், நமது உணவுக்கும், உடலுக்கும் தொடர்பு இருப்பது போல் நமது உணவுக்கும், எண்ணங்களுக்கும் தொடர்பு இருக்கிறது. இதை பின்வரும் நிகழ்வு மூலம் அறியலாம்.
ஒரு முறை நபித்தோழர் மஆத் பின் ஜபல் என்பவர் நபிகளாரிடம், ‘நாயகமே! எப்போதுமே என் பிரார்த்தனைகள் இறைவனால் உடனே ஏற்கப்பட நான் என்ன செய்ய வேண்டும்’ என்று கேட்டார். அப்போது, ‘உன் உணவை அனுமதிக்கப்பட்ட (ஹலால்) உணவாக ஆக்கிக்கொள்’ என்று நபிகளார் பதில் அளித்தார்கள்.
இந்நிகழ்வு நம் உணவுக்கும், நமது மனதுக்கும் அதிக தொடர்பு இருக்கிறது என்பதையே நமக்கு நன்கு உணர்த்துகிறது. எனவே நமது உணவு, உடை, உறைவிடம் என நம்மைச்சுற்றியுள்ள அனைத்திலும் நமது எண்ண ஓட்டங்களுக்கும் இடையே நிறையத் தொடர்புகள் இருக்கின்றன. அதில் சந்தேகப்புத்தியும் சற்று மறைந்தே இருக்கின்றன. எனவே எப்போதும் நாம் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். இல்லையேல் சந்தேகத்தின் வலையிலிருந்து தப்பிப்பது சிரமமாக அமையும்.
என்றும், எதையும், எப்போதும் நாம் நேர்மறைச் சிந்தனையுடன், நல்ல எண்ணத்துடன் அணுகத் தொடங்கினால் அவை அனைத்தும் நல்ல செயல்பாடுகளாக வெளிப்படும்.
இன்றைக்கு சந்தேகப்படும் நபர்களை விட, சந்தேகப்படும்படியாக நடந்து கொள்ளும் நபர்கள் தான் மிகஅதிகம். காரணம், அவர்களது தினசரி வெளிப்பாடுகள் அப்படித்தான் இருக்கின்றன. அவர்களது சொல்லில், செயலில், கொடுக்கல் வாங்கலில், நடைமுறையில் என அனைத்திலும் ‘சந்தேக ரேகை’ இழையோடு வதைக் காணலாம். இது நிச்சயம் மாற்றப்பட வேண்டும்.
நமது உள்ளத்தில் உண்மை குடியிருக்கும் போது நமது வெளிப்பாடுகள் அனைத்தும் சந்தேகமற்றதாகவே இருக்கும். இதனால் தான் உண்மையின் உரைக்கல்லான திருக்குர்ஆன் ‘இது இறைவேதம் இதில் சந்தேகம் ஏதும் இல்லை’ (2:2) என்று அழுத்தமாக பதிவு செய்கிறது.
நமது உள்ளத்திற்குள் அந்த சந்தேகப்பேர்வழியை என்றும் அனுமதிக்கக் கூடாது. ஒருமுறை அவன் வந்துபோய் பழகிவிட்டால் பிறகு அவனை விரட்டியடிப்பது கடினமாகிவிடும். இன்னும் சொல்லப்போனால் அந்தச் சந்தேகம் நமக்கே ஒரு சாபக்கேடு தான். தேகம் முழுவதும் சந்தேகத்தை வைத்துக் கொண்டு எப்படி நிம்மதிப் பெருமூச்சு விட முடியும்?
இஸ்லாம் என்றாலே நிம்மதி என்று பொருள். அதாவது இம்மார்க்கத்தில் சந்தேகம் என்று எதுவுமே இல்லை என பொருள். உண்மையிலேயே இஸ்லாம் அப்படித்தான் இருக்கிறது. ஒவ்வொரு முஸ்லிமும் அப்படித்தான் இருக்கவும் வேண்டும்.
வாருங்கள், தூய எண்ணங்களை விதைப்போம், தீய சந்தேகங்களை புதைப்போம்.
மவுலவி எஸ். என். ஆர். ஷவ்கத் அலி மஸ்லஹி, ஈரோடு.