பல்வேறு மோசடிகளுடன் தொடர்புடையவர் என சந்தேகிக்கப்படும் பெண் ஒருவரை யாழ்ப்பாணப் பொலிஸார் யாழ். புகையிரத நிலையத்தில் வைத்து கைது செய்துள்ளனர்.
நேற்று காலை குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நீதிமன்றத்தால் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட பெண் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர், வவுனியாப் பிரதேசத்தைச் சேர்ந்த 32 வயது மதிக்கத்தக்க பெண் எனவும், அவர் நாட்டின் பல பாகங்களிலும் பலதரப்பட்ட பண மோசடிகளில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
குறித்த பெண்ணை கைது செய்வதற்கு 38 பிடியாணை உத்தரவுகள் நீதிமன்றங்கள் பிறப்பிக்கப்பட்டிருந்த போதிலும். குறித்த பெண் நீண்ட நாட்களாக பொலிஸாரை ஏமாற்றி தப்பித்து வந்துள்ளார்.
இந்நிலையில், யாழ்ப்பாணத்திலுள்ள குடும்பஸ்தர் ஒருவரிடம் வெளிநாட்டுக்கு அழைத்துச் செல்வதாகக் கூறி 10 இலட்சம் ரூபா பண மோசடிசெய்துள்ளதாகவும் குறித்த பெண் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது.
இவ்வாறான நிலையில் தமக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து குறித்த பெண்ணை நேற்றைய தினம் யாழ். பிரதான புகையிரத நிலையத்தில் வைத்துக் கைது செய்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.