நிலம் விற்று கிடைத்த ரூ.55 லட்சமும் செல்லாத பணமா? அதிர்ச்சியில் பெண் தற்கொலை!

ரூ.500 மற்றும் 1,000 ஆகிய நோட்டுகள் செல்லாது என்ற பிரதமர் மோடியின் அறிவிப்பை கேட்ட தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த பெண் ஒருவர் அதிர்ச்சியில் தற்கொலை செய்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மெகபூபாபாத் மாவட்டத்தில் உள்ள சனிகாபூரை சேர்ந்தவர் வினோதா(55). இவர் தனது 12 ஏக்கர் நிலத்தை விற்று 55 லட்சம் ரூபாயை ரொக்கமாக வைத்திருந்தார். பணம் அனைத்தும் 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் பண்டல்களாக இருந்தது. வினோதாவும் இவருடைய கணவரும் பணத்தை வங்கியில் டெபாசிட் செய்யலாம் என்று திட்டமிட்டிருந்தனர்.

ஆனால் பிரதமர் மோடி திடீரென்று 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று அறிவிக்கவே வினோதா அதிர்ச்சிடையந்தார். பணம் முழுவதும் செல்லாமல் போய்விட்டதே என்று அலறினார். இதே கவலையில், பணத்தை மாற்றுவது எப்படி என்று யோசித்துக்கொண்டிருந்தார். ஆனால், இதில் பலனில்லை என்பதை அறிந்த வினோத அதிர்ச்சியில் இருந்து மீளாமலே தற்கொலை செய்துக்கொண்டதாக அவரது கணவர் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் பேசியபோது, இவ்வளவு பெரிய தொகையை வங்கியில் செலுத்தாமல் வீட்டில் வைத்திருந்தது தவறாக போய்விட்டது. இதனால் எனது மனைவியை இழந்து விட்டேன்.

மேலும், பணம் செல்லாமல் போய்விட்டதாக தொலைக்காட்சியில் பார்த்து மகன் கூறியதால் அதிர்ச்சியில் தனது மனைவி தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கணவர் தெரிவித்தார். எனினும், வினோத வைத்திருந்த மொத்தப் பணத்தையும் அவரது 3 பிள்ளைகள் பங்கு கேட்டதால் வினோதா தற்கொலை செய்துக்கொண்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.