பூரண சந்திர தினமான எதிர்வரும் திங்கட்கிழமை (14) மிகப் பெரிய சந்திரனை (Super Moon) அவதானிக்கலாம் என இலங்கை கோள் மண்டலம் அறிவித்துள்ளது.
68 வருடங்களின் பின், பூமியில் இருந்தவாறு அவதானிக்கக்கூடிய வகையில் மிகப் பெரிய சந்திரனை வெற்றுக் கண்களால் அவதானிப்பதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது, சாதாரணமான சந்திரனின் தோற்றத்திலும் பார்க்க 14% பெரிய சந்திரனை அவதானிக்கலாம் எனவும், அதன் பிரகாசம் சாதாரண முழு நிலவின் பிரகாசத்திலும் 30% அதிகமாகக் காணப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, குறித்த நிகழ்வு 68 வருடங்களுக்கு முன்னர் 1948ல் நிகழ்ந்துள்ளதாக இலங்கை கோள் மண்டலம் அறிவித்துள்ளது.
அத்துடன் குறித்த நிகழ்வு இன்னும் 18 வருடங்களின் பின்னர் எதிர்வரும் 2034ம் ஆண்டு நவம்பர் 25ம் திகதி மீண்டும் இடம்பெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.