இயல்பாக மூச்சு விடுவதால் ஜெயலலிதாவுக்கு வெகு நேரம் செயற்கை சுவாசம் அகற்றம்

இயல்பாக மூச்சு விடுவதால் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு நேற்று வெகு நேரம் செயற்கை சுவாசம் அகற்றப்பட்டிருந்தது.
உடல்நிலையில் முன்னேற்றம்
உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா, கடந்த செப்டம்பர் மாதம் 22-ந் தேதி சென்னை ஆயிரம்விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அங்குள்ள டாக்டர்களுடன் இணைந்து லண்டன் டாக்டர் ரிச்சர்டு ஜான் பீலே, டெல்லி எய்ம்ஸ் டாக்டர்கள் கில்நானி, அஞ்சன் டிரிக்கா, நிதிஷ் நாயக் ஆகியோர் தீவிர சிகிச்சை அளித்தனர்.
முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படத் தொடங்கியதை தொடர்ந்து, அவருக்கு பிசியோதெரபி சிகிச்சை அளிப்பதற்காக சிங்கப்பூரில் இருந்து சீமா, மேரி சியாங் ஆகிய 2 பெண் பிசியோதெரபி நிபுணர்கள் உடற்பயிற்சி அளித்தனர். தற்போது, ஜூடி என்ற பிசியோதெரபி நிபுணர் மட்டும் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு உடற்பயிற்சி அளித்து வருகிறார். நேற்றும், அவர் சிகிச்சையை தொடர்ந்தார்.
செயற்கை சுவாசம் அகற்றம்
நேற்று 51-வது நாளாக முதல்-அமைச்சர் ஜெயலலிதா சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். நேற்று முன்தினம் நீண்ட நேரம் ஜெயலலிதா நாற்காலியில் அமர்ந்திருந்தார். அப்போது, ‘டிரக்கியாஸ்டமி’ சிகிச்சை மூலம் அளிக்கப்பட்டு வந்த செயற்கை சுவாசம் இல்லாமலேயே, தொடர்ந்து 14½ மணி நேரம் இயல்பாக சுவாசித்தார்.
நேற்று முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு செயற்கை சுவாசம் அகற்றப்பட்டது. அதிகாலையில் இருந்து இரவு வரை தொடர்ந்து வெகு நேரம் அவர் இயல்பாகவே மூச்சு விட்டார். நீண்ட நேரம் நாற்காலியிலும் அமர்ந்திருந்தார். எனவே, முதல்-அமைச்சர் ஜெயலலிதா வெகு விரைவில் சாதாரண வார்டுக்கு மாற்றப்பட இருக்கிறார். இன்னும் ஒரு வாரத்தில் அவர் சிகிச்சை முடிந்து வீடு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து விசாரிப்பதற்காக நேற்று தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை தலைவர் தனியரசு எம்.எல்.ஏ., தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க மாநில பொதுச் செயலாளர் சி.ராமநாதன், இந்துஸ்தான் வர்த்தக சபை தலைவர் எம்.ரசாக் உள்ளிட்டோர் அப்பல்லோ ஆஸ்பத்திரிக்கு வந்திருந்தனர்.
நல்ல செய்தி
ஆஸ்பத்திரிக்கு வெளியே, தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை தலைவர் தனியரசு எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறியதாவது:-
முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நலம் குறித்து விசாரிக்க வந்தேன். பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை மற்றும் மூத்த நிர்வாகிகளை சந்தித்து பேசினேன். முதல்-அமைச்சர் ஜெயலலிதா மிக விரைவாக பூரண குணமடைந்து வருகிறார். விரைவில் வீடு திரும்பி அரசு மற்றும் நிர்வாக பணியை மிக வேகமாக தொடருவார் என்ற நல்ல செய்தியை சொன்னார்கள்.
நாட்டுமக்களுடைய வேண்டுதல், பிரார்த்தனைக்கு கிடைத்த பலனாக ஜெயலலிதா நெருக்கடியான, கடினமான நிலையில் இருந்து மீண்டு மிக வலிமையாக மக்களுடைய ஆதரவோடு முழுமையான குணமடைந்து இன்னும் பல ஆண்டுகள் தமிழ்நாட்டு மக்களுடைய நலனுக்காக நலத்திட்டங்களை தந்து அரசு நிர்வாகத்தை நடத்துவார். தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவையின் சார்பில் அவர் பரிபூரண குணமடைய நெஞ்சார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.