சுவிஸ் அரசாங்கம் இலங்கையுடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தால் சுவிஸில் தஞ்சமடைந்துள்ள தமிழர்களுக்கு எவ்வித பாதிப்புமில்லையென அந்நாட்டின் சோசலிச ஜனநாயகக் கட்சி உறுப்பினரும் தூன் நகரசபை உறுப்பினருமான தர்சிகா கிருஸ்ணானந்தம் தெரிவித்துள்ளார்.
சுவிற்ஸர்லாந்தில் தஞ்சமடைந்துள்ள இலங்கை அகதிகள் தொடர்பில் அந்நாட்டின் உப ஜனாதிபதியும் நீதியமைச்சருமான சைமனேட்டா சொமாருகாவின் பிரதிநிதி மற்றும் அரசியல் பிரமுகர்களுடன் இன்று இடம்பெற்ற முக்கிய சந்திப்பின் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே தர்சிகா கிருஸ்ணானந்தம் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இச் சந்திப்பு குறித்து அவர் மேலும் கூறுகையில்,
சுவிற்ஸர்லாந்தின் உப ஜனாதிபதியும் நீதியமைச்சருமான சைமனேட்டா சொமாருகாவின் பிரதிநிதியின் அழைப்பின் பெயரில், சுவிற்ஸர்லாந்தில் வசிக்கும் இலங்கைத் தமிழ் மக்களின் பிரதிநிதி என்ற வகையில் நான் இச்சந்திப்பிற்கு அழைக்கப்பட்டிருந்தேன்.
இதன்போது எமது மக்களின் பிரச்சினைகளை தெளிவாக அவர்களுக்கு எடுத்துத்துரைத்தேன்.
அண்மையில் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த சுவிற்ஸர்லாந்தின் உப ஜனாதிபதியும் நீதி மற்றும் பொலிஸ்துறை அமைச்சருமான சைமனேட்டா சொமாருகா, புகலிடக்கோரிக்கையாளர்கள் தொடர்பில் மிக முக்கிய ஒப்பத்தத்தில் இலங்கை அரசாங்கத்துடன் கைச்சாத்திட்டிருந்தார். குறித்த ஒப்பந்தம் தொடர்பில் அவர்களிடம் பேசினேன்.
இதனால் எவ்வித பாதிப்பும் சுவிற்ஸர்லாந்தில் தஞ்சமடைந்துள்ள இலங்கை அகதிகளுக்கு ஏற்படாதென தெரிவித்தனர்.
குறித்த ஒப்பந்தம் கடந்த 1994 ஆம் ஆண்டு முதல் இருப்பதாகவும் இவ்வாறான ஒப்பந்தங்கள் ஏனைய நாடுகளுடனும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் இதனால் ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட்ட நாட்டை கண்காணிக்க வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்தனர்.
ஏறத்தாழ இங்கு 50 ஆயிரம் தமிழர்கள் இருக்கிறார்கள், இலங்கையில் தற்போதும் மனித உரிமை மீறல்கள் இடம்பெறுகின்றன, காணாமல் போகிறார்கள், காணாமல் போனவர்கள் தொடர்பில் விசாரணை நடைபெறவில்லை, பெண்கள் பாதிக்கப்படுகின்றனர் என கேட்டபோது,
சுவிற்ஸர்லாந்தில் தற்போது அகதி தஞ்சமடைந்திருக்கும் ஒவ்வொருவரையும் தனிப்பட்ட முறையில் விசாரணை செய்வதாகவும் அவர்கள் தஞ்சம் கோரும் உண்மைத்தன்மை உறுதிப்படுத்தப்பட்டால் அவர்களின் அகதி தஞ்சம் கிடைக்கும்.
இதேவேளை இலங்கை தொடர்பில் அனைத்தும் தெரிந்தவரே அவர்களை விசாரணை செய்வார். இதனால் அவர்கள் உண்மையில் பாதிக்கப்பட்டிருந்தால் அவர்களுக்கு அகதி தஞ்சம் கிடைக்கும் என தெரிவித்தனர்.
நான் இங்கு இருக்கும் உறவுகளுக்கு தெரிவிக்க விரும்புவது,
நான் ஒரு சுவிஸ் அரசியல்வாதி. நீங்கள் தெரிவிக்கும் கருத்தை ஏற்றுக் கொள்கிறேன். ஆனால் உங்களது வழக்குகளை விசாரித்து நடத்த முடியாது.
ஆகவே நீங்கள் சிறந்த சட்டத்தரணி மூலம் உரிய ஆதாரங்களை திரட்டி இதனை மேற்கொள்ளுங்கள்.
சட்டத்தரணிகள் தொடர்பில் உதவி தேவைப்பட்டால் என்னுடன் தொடர்பு கொண்டால் உதவி செய்ய முடியும்.
இன்று என்னுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட மூவரும் சுவிற்ஸர்லாந்தின் உப ஜனாதிபதியும் நீதி மற்றும் பொலிஸ்துறை அமைச்சருமான சைமனேட்டா சொமாருகாவுடன் அண்மையில் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்தவர்களாவர்.
எனினும் இலங்கையின் தற்போதைய நிலைமை குறித்து உறுதியாக தெரிவிக்கவில்லை.
உப ஜனாதிபதியும் நீதி மற்றும் பொலிஸ்துறை அமைச்சருமான சைமனேட்டா சொமாருகாவுடன் சந்தித்து கலந்துரையாட சந்தர்ப்பம் ஏற்படுத்தி தருவதாக அவர்கள் தெரிவித்தாக தர்சிகா கிருஸ்ணானந்தம் தெரிவித்தார்.