மனைவியை விவாகரத்து செய்த இந்தி நடிகர் ஹிருத்திக் ரோஷனுக்கும் நடிகை நேகா துபியாவுக்கும் காதல் மலர்ந்துள்ளது. இருவரும் ஜோடியாக சுற்றுகிறார்கள்.
இந்தி பட உலகில் முன்னணி கதாநாயகனாக இருக்கும் ஹிருத்திக் ரோஷனுக்கு 42 வயது ஆகிறது. இவருக்கும் பழம்பெரும் நடிகர் சஞ்சைய்கான் மகள் சுஷானேவுக்கும் 2000-ம் ஆண்டில் திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஹிரேகான், ஹிரிதான் என்று 2 மகன்கள் உள்ளனர். மகிழ்ச்சியாக கழிந்த இவர்கள் குடும்ப வாழ்க்கையில் 2013-ஆம் ஆண்டு புயல் வீசியது. இருவரும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தார்கள். 2014-ஆம் ஆண்டு விவாகரத்தும் செய்து கொண்டார்கள்.
தற்போது ஹிருத்திக் ரோஷன் தனியாக வசித்து வருகிறார். படங்களிலும் தீவிரமாக நடிக்கிறார். இந்த நிலையில் ஹிருத்திக் ரோஷனுக்கும் இந்தி நடிகை கங்கனா ரணாவத்துக்கும் நெருக்கம் ஏற்பட்டது. சுஷானா பிரிவதற்கு இவர்கள் நெருக்கமும் காரணம் என்று கூறப்பட்டது. ஆனால் சில மாதங்களுக்கு முன்பு இவர்களின் காதலிலும் விரிசல் விழுந்தது. இருவரும் ஒருவரையருவர் குற்றம் சாட்டினார்கள். தனது முன்னாள் காதலர் கீழ்த்தரமாக நடந்து கொள்கிறார் என்று கங்கனா ரணாவத் டுவிட்டரில் கருத்து பதிவு செய்தார். இதை தொடர்ந்து கங்கனாவுக்கு ஹிருத்திக் ரோஷன் வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார். பதிலுக்கு கங்கனாவும் வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார். இவர்களின் தகராறு இந்தி பட உலகில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் ஹிருத்திக் ரோஷனுக்கும் நடிகை நேகா துபியாவுக்கும் தற்போது காதல் மலர்ந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நேகா துபியா கேரளாவை சேர்ந்தவர். இவருக்கு 36 வயது ஆகிறது. மலையாளம், தெலுங்கு, இந்தி படங்களில் நடித்து வருகிறார். ஹரித்திக் ரோஷனும் நேகா துபியாவும் சமீபத்தில் ஒரு கலை நிகழ்ச்சிக்கு ஒன்றாக சென்றதாகவும் அப்போது அவர்களுக்குள் நெருக்கம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இருவரும் ஜோடியாக சுற்றி வருகிறார்கள். அவர்கள் கட்டி பிடித்துக்கொண்டு நிற்பது போன்ற படங்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன. இந்த காதல் கிசுகிசுவுக்கு இருவரும் பதில் சொல்லாமல் மவுனம் காத்து வருகிறார்கள்.