அமெரிக்க நாடாளுமன்றத்திற்கு சமீபத்தில் நடைபெற்ற தேர்தலில் முதல்முறையாக தமிழகத்தை பூர்விகமாக கொண்ட கமலா ஹாரிஸ்(51) வெற்றி பெற்றார்.
கமலா ஹாரிஸ் தாயாரான டாக்டர் சியாமளா கோபாலன் புற்றுநோய் நிபுணர். சென்னையைச் சேர்ந்த இவர் கடந்த 1960-ம் ஆண்டு அமெரிக்காவுக்கு சென்றார். அங்கு ஜமைக்காவை சேர்ந்த டொனால்ட் என்பவரை திருமணம் செய்துக் கொண்டார்.
இந்த தம்பதியருக்கு மகளாக கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள ஆக்லாந்தில் கமலா ஹாரிஸ் பிறந்தார். கலிபோர்னியா அரசு தலைமை வழக்கறிஞராக பணிபுரிந்து வந்தபடி, ஜனநாயக கட்சியை சேர்ந்த பிரபல பெண் தலைவர்களில் ஒருவராகவும் இருந்துவந்த கமலா ஹாரிஸ், செனட் சபைக்கு நடைபெற்ற தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் கலிபோர்னியா தொகுதியில் போட்டியிட்டார்.
இந்த தேர்தலில் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட லோரட்டா சான்செஸ் என்பவரை சுமார் 2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து, வெற்றி பெற்றார்.
அமெரிக்க தேர்தல் வரலாற்றில் செனட் உறுப்பினராக இந்தியர் ஒருவர், குறிப்பாக பெண் ஒருவர், தேர்வானது இதுவே முதல்முறை என்ற நிலையில் கமலா ஹாரிஸ் இந்த நாட்டின் முதல் பெண் அதிபர் ஆக வரக்கூடும் என அமெரிக்காவின் பிரபல இணைய ஊடகமான ‘ஹஃபிங்டன் போஸ்ட்’ மதிப்பீடு செய்துள்ளது.
இவரது வெற்றியை கொண்டாடும் விதமாக சிறப்புக் கட்டுரை வெளியிட்டுள்ள அந்த ஊடகம், கமலா ஹாரிஸ், அமெரிக்காவின் முதல் பெண் அதிபராக வரக்கூடும் என குறிப்பிட்டுள்ளது.
‘கலிபோர்னியா மாநிலத்தின் புகழ்பெற்ற அரசு வக்கீலாக இருந்து, தற்போது கேப்பிட்டல் ஹில் (அமெரிக்க பாராளுமன்ற கட்டிடம் அமைந்துள்ள இடம்) நோக்கிச் செல்லும் இவர், அடுத்தாக செல்லப்போகும் இடம் வெள்ளை மாளிகையாக இருக்கும்’ என அந்த கட்டுரை சுட்டிக் காட்டுகிறது.
ஜனநாயக கட்சியை சேர்ந்த எம்.பி. என்ற முறையில் அமெரிக்க அதிபர் ஒபாமா மற்றும் துணை அதிபர் ஜோ பிடன் ஆகியோரின் ஆதரவை பெற்றிருப்பதால் இந்த அனுபவத்தின் வாயிலாக வரும் 2020-ம் ஆண்டு நடைபெறும் அதிபர் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக கமலா ஹாரிஸ் தீர்மானிக்க வேண்டும் எனவும் அந்த கட்டுரையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.