அலுவலகத்திற்கு வந்து தூங்கும் பணியாளர்களைக் கண்டு எரிச்சலடையும் மேலதிகாரிகளுக்கு ஆறுதல் அளிக்கும் ஆய்வு முடிவு ஒன்றை மிச்சிகன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்டுள்ளனர். தூங்கும் பணியாளர்கள்தான் அதிகத் திறனுடன் பணியாற்றுவார்கள் என்பதுதான் அவர்கள் மேற்கொண்ட ஆய்வின் முடிவு.
18 முதல் 50 வயது வரை ஆனவர்கள் இடையே அவர்கள் ஓர் ஆய்வை மேற்கொண்டனர். ஆய்வுக்கு முன்பு மூன்று இரவுகள் அவர்கள் ஒரே கால அளவுக்குத் தூங்க அனுமதிக்கப்பட்டனர். அதனைத் தொடர்ந்து, அவர்களது உற்சாகம், பணியின் மீதான கவனம், தூக்க உணர்வு ஆகியவை குறித்து ஆய்வு செய்யப்பட்டது. பின்பு அவர்களில் ஒரு பகுதியினர் 60 நிமிடங்களுக்குத் தூங்க அனுமதிக்கப்பட்டனர்.
மற்றொரு பகுதியினர் தூங்காமலிருப்பதற்காக அவர்களுக்கு விடியோ காட்சிகள் காட்டப்பட்டன.இறுதியாக, ஆய்வில் பங்கேற்ற அனைவரின் பணித் திறனும் கணக்கிடப்பட்டது. அதில், 60 நிமிடங்கள் தூங்கி எழுந்தவர்களிடம் உற்சாகமும், பணியில் கவனமும் அதிக அளவில் இருந்தது கண்டறியப்பட்டது.
அதே நேரம், தூங்க அனுமதிக்கப்படாதவர்கள், உற்சாகமின்றி, கவனக் குறைவுடன் செயல்பட்டதும் தெரிய வந்தது. தற்போதைய சூழலில், பெரும்பாலானவர்கள் இரவில் தூங்கும் நேரம் குறைந்து வருவதால், அலுவலகத்துக்கு வரும்போது அவர்களின் பணித்திறன் முழு அளவில் இருப்பதில்லை எனவும், அவர்களைத் தூங்க அனுமதித்தால் அவர்களிடமிருந்து மிகச் சிறந்த சேவையைப் பெறலாம் எனவும் மிச்சிகன் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.