மும்தாஜ் நினைவாக தாஜ்மகால் எப்படி உருவானது என்ற வரலாற்றைகாண்போம்.
‘‘மற்ற மனைவிகளிடம் அரசர் கொண்டிருந்த உறவில் ஒரு திருமண தகுதிக்கு மேலாக எதுவும் இல்லை. மேன்மையின் இருப்பிடத்தில் (மும்தாஜ்) அவர் கொண்டிருந்த அந்தரங்கம், ஆழ்ந்த அன்பு, கவனிப்பு, நல்லெண்ணம் ஆகியவை மற்றவர்களிடம் கொண்டிருந்ததைக் காட்டிலும் ஆயிரம் மடங்கு அதிகமாக இருந்தது’’–ஷாஜகான் அரசவையின் அதிகாரப்பூர்வ வரலாற்றுப்பதிவாளர் குவாசினி எழுதிய வார்த்தைகள் இவை.
மும்தாஜ் மறைந்ததற்கு பிறகான ஷாஜகானின் செயல்கள் இதற்கு உயிர்கொடுத்தன. முன்பு அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் இருந்து தோண்டி எடுத்து ஊர்வலமாக கொண்டு வரப்பட்ட மும்தாஜ் உடல் ஆக்ராவில் புதைக்கப்பட்டது. மும்தாஜ் இறந்து ஓராண்டு கழித்து அந்த இடத்தில் 1632–ம் ஆண்டு தாஜ்மகால் கட்டும் பணி தொடங்கியது.
பல நாடுகளைச் சேர்ந்த 20 ஆயிரம் பணியாளர்கள், ஆயிரத்திற்கும் மேற்பட்ட யானைகள் என ஷாஜகானின் கனவு மாளிகையைக் கட்டி எழுப்பும் பணிகள் நடந்தன. ஒரே பாணி கட்டிடக்கலையாக இல்லாமல், இஸ்லாமிய, இந்திய, பாரசீக, மற்றும் துருக்கி நாட்டவரின் பாணிகளை குழைத்து தாஜ்மகால் எழுப்பப்பட்டது.
தாஜ்மகாலை வடிவமைத்து, உருவாக்கியவராக ஆளாளுக்கு ஒரு பெயரைச் சொன்னாலும் லாகூரைச் சேர்ந்த உஸ்தாத் அகமது என்பவர்தான் இதில் முக்கிய பங்காற்றி இருக்கிறார். வல்லுனர்கள் பல பேர் யோசனை சொன்னாலும் கட்டிடக்கலையில் பெரும் ஆர்வமும் அறிவும் கொண்ட ஷாஜகான், தானே பார்த்துப் பார்த்து தாஜ்மகாலின் ஒவ்வொரு அம்சத்தையும் முடிவு செய்தார்.
கண்ணைப் பறிக்கும் அந்த வெள்ளைச் சலவைக்கற்கள் முழுக்க ராஜஸ்தானிலுள்ள உலகப்புகழ் பெற்ற மக்ரானா என்ற இடத்திலிருந்து கொண்டு வரப்பட்டன. கட்டிடத்தில் பதிப்பதற்காக பச்சை மற்றும் பளிங்கு கற்கள் சீனாவிலிருந்தும், வைடூரியங்கள் ஆப்கானிஸ்தானிலிருந்தும், பச்சையும் நீலமும் கலந்த ரத்தின கற்கள் திபெத்திலிருந்தும் வந்திறங்கின. நீலக்கற்கள் இலங்கை மற்றும் அரேபிய நாடுகளில்இருந்து வரவழைக்கப்பட்டன.
முதல் நுழைவு வாயிலிலிருந்து பார்க்கும் போது சிறியதாக தெரியும் தாஜ்மகால், நெருங்கிச் செல்லச்செல்ல பிரமாண்டமாக விரிந்து, பார்ப்பவர் விழிகளை விரிய வைக்கும். அருகில் சென்றுவிட்டால், அண்ணாந்து பார்த்தாலும் முழு வடிவத்தையும் காண முடியாது.
தாஜ்மகாலுக்கு வெளியே நான்கு பக்கத்திலும் சற்று வெளிப்புறமாக சாய்ந்து நிற்பது போல தூண்கள் அமைக்கப்பட்டன. ஏதேனும் இயற்கை சீற்றம் ஏற்பட்டு தூண்கள் சாய்ந்தாலும் தாஜ்மகால் மீது விழக்கூடாது என்பதற்கே இந்த ஏற்பாடு.
முழுதுமாக வெள்ளைக்கற்களால் உருவாக்கப்பட்ட இந்த காதல் மாளிகை, நேரத்திற்கு ஏற்ப மாறுபட்ட வண்ணங்களில் காட்சியளிக்கும் சிறப்பு வாய்ந்தது. அதிகாலை சூரியன் உதயமாகும் போது இளஞ்சிவப்பு நிறத்திலும், நண்பகலில் பால் வண்ணத்திலும், மாலையில் சூரியன் அடங்கும் போது தங்க நிறத்திலும், இரவு நிலா வெளிச்சத்தில் வெள்ளியைப் போன்றும் தாஜ்மகால் தோன்றும். அதிலும் பவுர்ணமி இரவில் கொள்ளை அழகாகத் தெரியும்.
மொத்தத்தில் பூமிப்பந்தின் வியக்கத்தக்க பேரதிசயமாக, 20 ஆண்டுகளில் 32 கோடி ரூபாய் (அப்போதைய மதிப்பில்) செலவில், எழுந்து நின்றது தாஜ்மகால்.
மகாலின் உள்ளே திருக்குரான் வாசகங் களைப் பொறிப்பதற்கு உலகப்பிரசித்தி பெற்ற கலைஞரான, பாரசீகத்தைச் சேர்ந்த அமானாத் கானிடம் பேசினார்கள். ‘எந்த இடத்தில் என் கலைத்திறனைக் காட்டினாலும் அதன் கீழே கையெழுத்திடுவது வழக்கம். அதற்கு அனுமதித்தால் மட்டுமே பணி செய்வேன்’ என்று அவர் வைத்த கோரிக்கை ஏற்கப்பட்டது.
இன்றைக்கும் தாஜ்மகாலுக்குள் இருக்கும் ஒரே கையெழுத்து அவருடையது தான். மகாலின் உள்ளே வேறு யாரின் பெயரோ, படங்களோ கிடையாது.
தாஜ்மகால் கட்டுமான பணிகள் தொடங்கிய ஓராண்டுக்குப் பிறகு கொஞ்சம், கொஞ்சமாக இயல்பு நிலைக்குத் திரும்பினார் ஷாஜகான். மும்தாஜ் மறைந்த அடுத்த ஆண்டு குஜராத் உள்ளிட்ட சில பகுதிகளில் கடுமையான பஞ்சம் ஏற்பட்டது.
‘‘ரொட்டித்துண்டுக்காக மக்கள் எதையும் தரத்தயாராக இருந்தார்கள். ஆனால் ரொட்டி கொடுப்பவர்கள்தான் இல்லை. எங்கு பார்த்தாலும் பிச்சை கேட்டு நீட்டிய கரங்கள்… குழி விழுந்த கண்கள்… மக்கள் நாய்களைக் கொன்று சாப்பிட ஆரம்பித்தார்கள். பல தெருக்களில் எலும்புக்கூடுகள் போன்ற உடல்கள் கிடந்தன. இறந்தவர்களின் எலும்புகளை அரைத்து கோதுமை மாவுடன் சேர்த்து விற்று லாபம் சம்பாதித்தவர்களும் இருந்தார்கள்’’
–பஞ்சத்தை நேரில் பார்த்த வரலாற்றாசிரியர் அப்துல் ஹமீத் லஹோரியின் இந்த வர்ணனை அதன் தீவிரத்தை உணர்த்துகின்றன.
பஞ்சத்தில் இருந்து நாட்டை மீட்க வேண்டிய கடமை ஷாஜகானை அழைத்தது. இதுபோக ராஜ்ய பிரச்சினைகளைச் சமாளித்து எழுந்து வர வேண்டிய கட்டாயமும் அவருக்கு ஏற்பட்டது. ஒன்றிரண்டு ஆண்டுகளில் அவற்றை எல்லாம் சமாளித்துவிட்டு, அவர் பெயரை நிரந்தரமாக சொல்லும் நிறைய பணிகளை ஷாஜகான் செய்தார்.
யமுனை ஆற்றோரத்தில் காடாக கிடந்த இடத்தில் ‘ஷாஜகானாபாத்’ என்ற புதிய நகரை உருவாக்கி தலைநகரத்தை ஆக்ராவிலிருந்து அங்கு மாற்றினார். அதுதான் இன்றைய பழைய டெல்லியாக இருக்கிறது. இப்போது இந்தியப் பிரதமர்கள் கொடியேற்றும் டெல்லி செங்கோட்டை, இஸ்லாமியர் களின் தொழுகைக்கு பெயர் பெற்ற டெல்லி ஜும்மா மசூதி உட்பட காலம் அவ்வளவு எளிதில் அழித்திட முடியாத பலவற்றைக் கட்டி முடித்தார். கூடவே பிள்ளைகளும் வளர்ந்து நின்றார்கள். மூத்த மகன் தாராவுக்கு ஏறத்தாழ 40 வயதிருக்கும் போது ஷாஜகான் செய்த வேலை, அவரது ஆட்சியின் அந்திம காலத்திற்கு அடித்தளமிட்டது.
அது என்ன? குடிக்கத்தண்ணீர் கூட கிடைக்காத நிலை அவருக்கு ஏன் ஏற்பட்டது? ஷாஜகானின் கடைசி காலம் பற்றி யும், தாஜ்மகால் குறித்தும் வட்டமிடும் சர்ச்சைகள் உண்மையா? என்பது பற்றியும் அடுத்த வாரம் காண்போம்.
கட்டியவர் விரல்களை வெட்டினாரா?
தாஜ்மகால் போல வேறு கட்டிடம் எங்கும் உருவாகக்கூடாது என்பதற்காக அதன் கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களின் கைவிரல்களை ஷாஜகான் வெட்டி எடுத்துவிட்டதாக ஒரு தகவல் பரவிக்கிடக்கிறது. ஆனால் அதற்கான எந்த ஆதாரமும் வரலாற்றில் இல்லை. சின்னச்சின்ன சங்கதிகள் கூட பெரிதாக பதிவு செய்யப்பட்டிருக்கும் அந்தக் காலக்கட்டத்தில் இவ்வளவு பெரிய நிகழ்வு நடந்திருந்தால் அதற்கான பதிவு கண்டிப்பாக இருந்திருக்கும்.
சாதாரணமாக யோசித்துப் பார்த்தால் கூட, 20 ஆண்டு கள், வெவ்வேறு கால சூழல், பல நாட்டு நிபுணர்கள், தொழிலாளர்கள் மேற்கொண்ட தாஜ்மகால் கட்டு மானத்திற்குப் பிறகு அப்படியொரு சம்பவத்திற்கு வாய்ப்பிருப்பதாக தெரியவில்லை.