எது இல்லாவிட்டாலும் போராட்டங்களும், ஆர்ப்பாட்டங்களும் மட்டும் இலங்கையோடு தொடர்ந்து வரும் நிழல் என்பது அண்மைய காலகட்டத்தில் பகிரங்க வெளிச்சம்.
உரிமையை பெற்றுக் கொள்ளும் நோக்கத்தில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட விஷேட தேவையுடைய இராணுவத்தினரது ஆர்ப்பாட்டத்தின் போது, அவர்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது என்கின்ற விடயமே தற்போது பூதாகரமாக உருவெடுத்து நிற்கின்றது.
ஏற்கனவே குறித்த போராட்டம் அரசியல் இலாபங்களுக்காக மேற்கொள்ளப்பட்டு வந்தது என செய்திகள் வெளிவந்த நிலையில் கடந்த நாட்களில் அது உண்மையாக்கப்பட்டது.
தென்னிலங்கையில் பிரதமர் உட்பட அமைச்சர்கள் பலரும் அதனை ஒப்புக்கொண்டு கருத்து வெளியிட்டனர். அதே சமயம் இலங்கையில் இராணுவ புரட்சியினை மேற்கொள்வதற்காக இவை திட்டமிட்டு நடத்தப்பட்டது என நம்பகத்தகுந்த செய்திகளும் மறுப்பு செய்திகளும் மாறி மாறி வெளிவந்தன.
ஆனாலும் கூட்டு எதிர்க்கட்சியினர் இதனை விஸ்வரூபமாக்க முயற்சித்து வருகின்றனர். அதே சமயம் தென்னிலங்கை அரசியலில் தற்போதைய முக்கியஸ்தகர்களான பிக்குகள் மூலமாகவும் இந்த விடயம் மிகவும் வேகமாக பரப்பப்பட்டு கொண்டு வருகின்றது.
மற்றொரு பக்கம் மகிந்த ஆதரவாளர்களின் மூலமாகவும் இந்த விடயம் மறக்க முடியாத வடுவாக மாற்றும் செயற்பாடுகளும் அரங்கேற்றப்பட்டு வருகின்றது எனவும் கூறப்படுகின்றது.
எவ்வாறாயினும் இவை நல்லாட்சிக்கு எதிராக வேகமாக வளர்க்கப்பட்டு வரும் தீயாகவே தென்னிலங்கை புத்திஜீவிகள் தெரிவித்துள்ளனர்.
இவற்றின் ஆரம்பம் எதுவென நோக்கின் ஜனாதிபதி இரகசியத்தை வெளியிட்டு வீதியில் அலைய விடுவேன் என பகிரங்கமாக அறிவித்ததன் பின்னரே எனவும் கூறலாம்.
புதுக்கட்சி ஆரப்பித்தால் நடப்பது வேறு என சவால் கலந்த எச்சரிக்கை விடுத்த ஜனாதிபதி, புதுக் கட்சி ஆரம்பிக்கப்பட்ட பின்னரும் மௌனம் காத்து கொண்டு வருகின்றார். அவர் அப்படி என்ன பிரம்ம இரகசியம் வைத்துள்ளார், என்பது பற்றி இது வரை தெரியவில்லை.
ஆனாலும் அவர் அப்படி கூறியதன் பின்னர் நடைபெற்ற மாற்றங்கள் என்னமோ ஆட்சிக்கு எதிராக பயங்கர விளைவுகளை ஏற்படுத்தி விட்டது. என்றாலும் இது வரையில் புதுக்கட்சி தொடர்பாக ஜனாதிபதி எதுவும் கூற வில்லை.
மகிந்த தொடர்பில் ஊழல் குற்றச்சாட்டுகள் புளித்துப்போய் விட்ட நிலையில், சர்வதேசமே எதிர்பார்த்த போர்க்குற்றம் தொடர்பிலேயே மைத்திரி வெளிப்படுத்துவார், என்று காத்திருந்த தென்னிலங்கைக்கு இது வரை ஏமாற்றமே மிச்சம்.
உண்மையில் மைத்திரி இரகசியத்தை முன்வைக்க முயன்ற போது கோத்தபாய களத்தில் இறங்கினார். ஆரம்பமான அவருடைய ஆட்டத்திற்கு நல்லாட்சி கொஞ்சம் தடுமாறிப்போய் விட்டது என்றே கூறவேண்டும்.
கோத்தபாய மட்டும் நேரடியாக களம் இறங்காவிட்டால், மைத்திரி – ரணில் தரப்பு முன்னேறி இருக்கும். சரியான சமயத்தில் கோத்தபாய வருகை தந்துள்ளார். இவர் சொல்லிற்கு இலங்கை இராணுவத்திடையே பாரிய அளவு மதிப்பு இருக்கின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது. இது கொஞ்சம் பயங்கர விடயம் தான்.
தற்போது மைத்திரி முன்வைத்த கருத்துபடி இரகசியம் என புதிதாக ஏதாவது அவர் கூறிவாராயின், அது அவருடைய ஆட்சியையே நிலைகுலைய வைத்திடும் அளவு பாரதூரமானது. அதன் காரணமாகவே மைத்திரி தரப்பு பொறுமை காக்கின்றது என அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அதனை நிரூபிக்கும் வகையிலேயே புதுக்கட்சியின் பயணமும் ஆமை வேகத்தில் ஒவ்வொரு படியாக முன்னேறி வருகின்றது. ஆனாலும் பலம் மிகுந்த அத்திவாரத்துடனேயே மகிந்தவின் கட்சி எழுப்பப்பட்டு கொண்டு வருகின்றது.
போதாக்குறைக்கு ஆரம்பம் முதலாகவே இராணுவத்தினரை திசை திருப்ப முயற்சிகள் நடைபெற்று வந்தது. தற்போது அங்கவீனமடைந்த இராணுவத்தினர் மீதான தாக்குதல் விவகாரமும் பூதாகரமாக உருவெடுத்துள்ளது.
ஒருபக்கம் கூட்டு எதிர்கட்சி, அடுத்த பக்கம் மகிந்த அணி, இன்னொரு பக்கம் இராணுவம் மற்றும் நாட்டு மக்கள் இவ்வாறாக நல்லாட்சி தற்போது முற்றுகையிடப்பட்டுள்ளது.
கூடிய விரையில் இவற்றிக்கு முற்றுப்புள்ளி வைக்காவிடின் நாடு பல நெருக்கடிகளை சந்திக்கும் அச்சநிலையும் காணப்படுகின்றது.
நல்லாட்சி இப்போதைய சூழலை நாசூக்காக கையாளாவிட்டால் ஆட்சியையே, ஏன் நாட்டையே புரட்டிப்போட்டு விடும் அபாய நிலையே காணப்படுவதாகவும், அதற்கான முன்னேற்பாடுகள் கவனமான முறையில் நடைபெற்று வருவதாகவும் அவதானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.