பாதுகாப்பு தொடர்பான முக்கிய இரண்டு நிறுவனங்களின் உயர் பதவிகளில் அதிரடி மாற்றங்களைச் செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
குற்ற விசாரணைகளை மேற்கொள்ளும் அரசாங்கத்தின் முக்கிய இரண்டு நிறுவனங்களின் சில அதிரடி மாற்றங்கள் செய்யப்பட உள்ளதாக அரசாங்கத்தின் சிரேஸ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதன்படி குறித்த நிறுவனங்களில் கடமையாற்றி வரும் முக்கிய அதிகாரிகள் பலர் பதவிகளை இழக்க உள்ளதாக அவர் கொழும்பு வார இறுதி பத்திரிகையொன்றுக்குத் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்…
கடந்த சில ஆண்டுகளில் இடம்பெற்ற ஊழல் மோசடிகள் மற்றும் நிதி மோசடிகள் தொடர்பில் விசாரணை செய்ய நியமிக்கப்பட்ட நிறுவனங்கள் சில மற்றும் அரசாங்க திணைக்களம் ஒன்று தொடர்பில் தொடர்ச்சியாக முறைப்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
இந்த முறைப்பாடுகளைத் தொடர்ந்து குறித்த நிறுவனங்கள் தொடர்பில் அரசாங்கம் இரகசிய விசாரணை நடத்தியது.
இந்த விசாரணை தொடர்பிலான அறிக்கை அரசாங்கத்திற்கு கிடைக்கப்பெற்றுள்ளது.இந்த விசாரணைகளில் குறிப்பிடப்பட்டுள்ள சாட்சி குறிப்புக்களின் அடிப்படையில் விசாரணைக்குழுக்களின் தலைவர்கள் சிலருக்கு எதிராக கடுமையான குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
இந்தக் குற்றச்சாட்டுக்கள் உண்மையானவை என்பது தெரியவந்துள்ளது.
விசாரணைகளை மூடி மறைத்தல், விசாரணைகளை கால தாமதமடையச் செய்தல், இடைத்தரகர்களை பயன்படுத்தி பிரச்சினைகளை இணக்கப்பாட்டுக்கு கொண்டு வருதல், பாலியல் லஞ்சம் பெற்றுக் கொள்ளுதல் உள்ளிட்ட பல்வேறு குற்றச் செயல்கள் தொடர்பில் சாட்சியங்கள் கிடைக்கப் பெற்றுள்ளன.
இந்த விசாரணை அறிக்கைக்கு அமைய அரசாங்கம் சில அதிகாரிகளை பணி நீக்க விரைவில் நடவடிக்கை எடுக்க உள்ளது என பேச்சாளர் தெரிவித்துள்ளார்.