சித்திரை வெயில் சுட்டெரிக்கிறது. அதிலிருந்து சருமத்தைக் காக்கவும், பாதிக்கப்பட்ட சருமத்தை பழைய நிலைக்குக் கொண்டுவரவும் இங்கே
அழகுக் குறிப்புகள் தருகிறார், அழகுக்கலை நிபுணர் ராஜம் முரளி.
“முன்பு எல்லாம் டூவீலரில் செல்லும் பெண்கள்தான் வெயிலின் தாக்கத்தில் இருந்து தங்களைத் தற்காத்துக்கொள்ள துப்பட்டாவால் முகமூடி போட்டுக்கொள்வார்கள். ஆனால், இன்று பஸ், ஆட்டோ ஏன்… நடந்து செல்லும்போதுகூட பெண்கள் முக்காடு போட்டுக்கொள்ளும் அளவுக்கு மாறியுள்ளனர். சூரியக் கதிர்கள் சருமத்தை தாக்கி ஏற்படுத்தும் கருமையில் இருந்து மீள, பாலை முக்கியப் பொருளாகக்கொண்டு தயார் செய்யும் ஹோம்மேட் `ஃபேஸ் பேக்’குகளை இங்கு பார்ப்போம்.
மூக்கின் ஓர கருந்திட்டுகள் மறைய…
வெயில் முகத்தில் படும்போது உடனடியாக பாதிக்கப்படும் பகுதிகள், நெற்றி, மூக்கு, கன்னங்கள் போன்ற மேடான பகுதிகள்தான். அதிலும் மூக்கின் ஓரங்களில் ஏற்படும் பிளாக் ஹெட்ஸை அகற்ற உபயோகிக்கும் க்ரீம்களால் அப்பகுதியின் சரும துவாரங்கள் திறந்துகொள்வதோடு, அங்கு சரும லேயர் உரிய ஆரம்பிக்கும். அதை அப்படியே கவனிக்காமல்விட்டால், நாளடைவில் வெயிலினால் பாதிக்கப்பட்டு கருந்திட்டுகளாக மாறிவிடும். இதற்கான ஒரு தீர்வைப் பார்ப்போம்.
ஒரு தக்காளியுடன் மூன்று டீஸ்பூன் பால் மற்றும் மூன்று டீஸ்பூன் பார்லி பவுடர் சேர்த்து அரைத்து, பாதிக்கப்பட்ட பகுதிகளில் திக்கான லேயராகவும், முகத்தின் மற்ற பகுதிகளில் மெல்லிய லேயராகவும் தடவவும். 15 நிமிடங்களுக்குப் பிறகு முகத்தை தண்ணீரில் கழுவவும். நாளடைவில் கருந்திட்டுகள் மறைவதுடன் முகம் பளபளப்பாகும்.
கருமை நீங்கி குளிர்ச்சி..!
வெயிலினால் கறுத்துவிட்ட முகத்தின் பொலிவை மீண்டும் மீட்கலாம். தயிர் 2 டீஸ்பூன், கஸ்தூரி மஞ்சள் ஒரு டீஸ்பூன், பயத்தம்மாவு 2 டீஸ்பூன், வேப்பந்தளிர் 4… இவற்றை ஒன்றாகச் சேர்த்து அரைத்து, முகம் மற்றும் கழுத்துப் பகுதிகளில் தேய்த்து 15 நிமிடங்களுக்குப் பிறகு கழுவவும். வெயில் காலம் முழுவதும் தினமும் இதை செய்துவர, கருமை ஏற்படாமல் தவிர்க்கப்படுவதுடன் நாள் முழுவதும் குளிர்ச்சியாக இருக்கும். வேப்ப இலையில் உள்ள ஆன்டிசெப்டிக் தன்மை, வியர்க்குரு வராமல் தடுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமும் வெயிலில் செல்பவர்களுக்கு..!
தினமும் வெயிலில் செல்பவர்கள் அதன் தாக்கத்திலிருந்து சருமத்தைப் பாதுகாக்க, பால் 3 டீஸ்பூன், இளநீர் வழுக்கை ஒரு டீஸ்பூன், வில்வ இலைகள் 4, பூலான் கிழங்கு ஒன்று… இவற்றை நன்கு ஊறவைத்து அரைத்து, முகம் மற்றும் உடலுக்குத் தேய்த்து குளித்து வரவும். வெப்பக்கதிர்களால் சருமத்துக்கு எந்த பாதிப்பும் ஏற்படாமல், நாள் முழுக்க குளுகுளு என புத்துணர்ச்சியுடன் இருக்கலாம்.
கைகள், கால்கள் கருமை நீங்க..!
பால் 2 டீஸ்பூன், கடலைமாவு 3 டீஸ்பூன், எலுமிச்சைச் சாறு 2 டீஸ்பூன், உருளைக்கிழங்கு சாறு 3 டீஸ்பூன்… இவற்றை ஒன்றாகக் கலந்து, வெயிலினால் கருமை படர்ந்த கை, கால்களில் தடவி 15 நிமிடங்களுக்குப் பிறகு கழுவினால் கருமை நீங்கும். தினசரி இதை தொடர்ந்து செய்துவர, இயற்கையான சரும நிறம் குறையாமல் பார்த்துக்கொள்ளலாம்.
அண்டர் ஆர்ம்ஸ் பிரச்னைக்கு…
பொதுவாக எப்போதும் `அண்டர் ஆர்ம்ஸ்’ஸில் (அக்குள்) அதிகமாக வியர்க்கக்கூடியவர்களுக்கு, வெயில் காலத்தில் இன்னும் அதிகம் வியர்த்து அந்தப் பகுதியே கறுப்பாக மாறக்கூடும். அதைப் போக்க, ஒரு பாத்திரத்தில் ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி, அதில் 20 கிராம் வெட்டிவேர் சேர்த்து, அரை டம்ளர் ஆகும்வரை நன்கு கொதிக்கவைத்து வடிகட்டவும். இதனுடன் 2 டீஸ்பூன் பால் பவுடர், 2 டீஸ்பூன் எலுமிச்சைச் சாறு, 2 டீஸ்பூன் முல்தானிமட்டி, 2 டீஸ்பூன் பூலான்கிழங்குத்தூள் சேர்த்துக் கலந்து, அண்டர் ஆர்ம்ஸ் பகுதிகளில் திக் லேயராகத் தடவி `பேக்’ போட்டு, 10 நிமிடங்களுக்குப் பிறகு குளிக்கவும். தினசரி குளிக்கும் முன் இதை தொடர்ந்து செய்து வந்தால், நாள்பட்ட கருமை நீங்குவதுடன் சருமம் மென்மையாகும்.’’
‘அய்யோ முகம் கறுத்துப்போகுமே’ என்று வெயிலுக்கு ஒளிய வேண்டாம் இனி!