பிரதமர் மோடி ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பை கடந்த செவ்வாய்க்கிழமை அறிவித்தார். அடுத்த நாள் அவர் ஜப்பான் புறப்பட்டு சென்றார்.
3 நாள் சுற்றுப்பயணம் முடிந்து இன்று தனி விமானம் மூலம் டெல்லி திரும்பிய பிரதமர் மோடி, உடனடியாக கோவாவுக்கு சென்றார். பனாஜி நகரில் கிரீன் பீல்டு விமான நிலையத்துக்கு அடிக்கல் நாட்டினார்.
அப்போது மோடி தனது கருப்பு பண ஒழிப்பு திட்டம் குறித்து ஆவேசமாக பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் கருப்புப் பணத்துக்கு எதிராக ஒருபோதும் நடவடிக்கை எடுக்கவில்லை. அவர்கள் நடவடிக்கை எடுக்க தயங்கினார்கள்.
கருப்புப் பணம் என்ற நோய் இந்தியாவை 70 ஆண்டுகள் பீடித்து இருந்தது. எங்களது 17 மாத ஆட்சியில் இந்த நோயை தீர்க்க முயற்சி எடுக்கப்பட்டுள்ளது.
பிரதமர் பதவியில் அமர வேண்டும் என்பதற்காக நான் தேர்தலில் வெற்றி பெறவில்லை. மக்களுக்காக செயல்படும் பிரதமராக இருக்க வேண்டும் என்பதையே விரும்பினேன். மக்கள்தான் கருப்பு பணத்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்க எங்களை தேர்ந்தெடுத்தனர். மக்களின் விருப்பமும் அதுதான்.
தேர்தலின்போது அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற உழைத்துக் கொண்டு இருக்கிறேன். ஊழல்வாதிகள் சட்டவிரோதமாக சேர்த்து வைக்கும் சொத்துக்களை பறிமுதல் செய்வேன்.
சுதந்திரத்துக்கு பின்னாளில் இருந்து நாட்டில் நடைபெற்றுள்ள ஊழல்களை வெளிப்படுத்துவேன். இதற்காக ஒரு லட்சம் இளைஞர்கள் பணியமர்த்தப்படுவார்கள்.
அடுத்தக்கட்டமாக பினாமிகள் பெயரில் சொத்துக்கள் வைத்திருப்பவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்போம்.
ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்று மத்திய அரசின் அறிவிப்பு மிகச் சரியான நடவடிக்கையாகும். இதற்கு மக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
வங்கி கணக்கு தொடங்க ஏராளமான சுலபமான வழிகள் உள்ளன என்பது மக்களுக்கு நன்றாக தெரியும். டெபிட் கார்டுகள் என்றால் என்ன? கிரிடிட் கார்டுகள் என்றால் என்ன? என்பது மக்களுக்கு இப்போதுதான் தெரிந்து இருக்கிறது.
ஒரு ரூபாய்கூட செலவு இல்லாமல் வங்கி கணக்குகளை மக்கள் தொடங்க முடியும். மக்களுக்கு அதிகாரம் கொடுக்கும் நடவடிக்கையாக மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
10 மாதங்களாக திட்டமிட்டு ரூ.500, ரூ.1000 நோட்டுகளை செல்லாது என்று அறிவித்துள்ளோம். இது, கருப்பு பணத்துக்கு எதிரான நடவடிக்கை என்பது மக்களுக்கு தெரியும்.
மத்திய அரசின் நடவடிக்கையில் உள்ள நியாயத்தை புரிந்து கொண்ட மக்களுக்கு நன்றி. நான் எதாவது தவறு செய்து இருந்தால் இந்த நாடு அளிக்கும் எந்த தண்டனையையும் ஏற்றுக் கொள்ள தயாராக இருக்கிறேன்.
நாட்டுக்காக எனது குடும்பத்தை துறந்து குஜராத்தில் இருந்து டெல்லி வந்திருக்கிறேன். நாட்டுக்காக என்னை நெருப்பில் போட்டு எரித்தாலும் தாங்கிக் கொள்ள தயார். நாட்டுக்காக எந்த தியாகத்துக்கும் தயாராக இருக்கிறேன். ஊழலற்ற இந்தியாவை உருவாக்குவேன்.
இந்தியாவில் உள்ள நேர்மையான மக்களுக்கு நன்மை ஏற்படவே ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தோம். டிசம்பர் 30-ந்தேதி வரை அவகாசம் கொடுங்கள். அனைத்து பிரச்சினைகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்து காட்டுகிறோம்.
ஏ.டி.எம்.களில் மக்கள் நிற்பது மத்திய அரசின் நிலைப்பாட்டுக்கு எதிரானது அல்ல. இரவு பகல் பாராமல் உழைக்கும் வங்கி ஊழியர்களுக்கு நான்கடமைப்பட்டு இருக்கிறேன். சிரமங்கள் இருந்தாலும் மத்திய அரசின் முயற்சியை வெற்றி பெறச் செய்துள்ளனர். மக்கள் ஆதரவு இருப்பதால்தான் மத்திய அரசின் இந்த முயற்சி வெற்றி பெற்றுள்ளது.
கருப்புப் பண ஒழிப்புக்காக எடுக்கப்பட்ட இந்த நடவடிக்கையால் இன்னும் 50 நாட்களுக்கு மட்டும் பாதிப்பு இருக்கும். பொருளாதாரத்தை சுத்தப்படுத்திய பின்பு ஒரு கொசு கூட பறக்க முடியாது. 2-ஜி ஊழலால்தான் மக்கள் ரூ.4 ஆயிரத்துக்கு வரிசையில் காத்து கிடக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இந்தியாவில் உள்ள ஏழை மக்கள் பாதிக்கப்படாமல் அவர்களை காப்பது எனது கடமை. பா.ஜனதா ஆட்சிக்கு வந்த பிறகே 20 லட்சம் பேர் புதிதாக வங்கி கணக்கு தொடங்கியுள்ளனர்.
கருப்புப் பணம் பதுக்கியவர்கள் பற்றி விசாரிக்க குழு அமைக்கப்படும். இதில் இருந்து ஒருபோதும் பின்வாங்க மாட்டோம். எனக்கு எதிராக திரண்டிருக்கும் சக்திகளை பற்றி எனக்கு தெரியும். அவர்கள் என்னை வாழவிட மாட்டார்கள். 70 ஆண்டுகளாக கொள்ளையடித்து சேர்த்துவைத்த பணத்துக்கு ஆபத்து என்பதால் அவர்கள் என்னை வாழவிட மாட்டார்கள். நான் தயாராக இருக்கிறேன்.
இந்தியாவில் இருந்து பணம் கொள்ளை போவதை நாங்கள் தடுத்துள்ளோம். இது எங்களது கடமையாகும்.
இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.
மோடி பேசும்போது மார்தட்டி பேசினார். மிகவும் உணர்ச்சி வசப்பட்டவராக இருந்தார். தனது பேச்சின்போது அவர் கண் கலங்கினார். அவரது உணர்ச்சிகரமான பேச்சை விழாவில் கலந்து கொண்டவர்கள் கைதட்டி ஆரவாரம் செய்து வரவேற்றனர்.