இலங்கை அருகே குறைந்த காற்றழுத்த தாழமுக்க நிலை நீடிப்பதால் அடுத்த 2 நாட்களுக்கு தமிழ்நாடு முழுவதும் அநேக இடங்களில் மழை பெய்யும் என்று வானிலை மைய இயக்குனர் எஸ்.பாலச்சந்திரன் தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை காலம் தொடங்கிவிட்ட போதிலும் இன்னும் சரியாக மழை பெய்யவில்லை.
இந்தநிலையில் தற்போது வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை மைய இயக்குனர் எஸ்.பாலச்சந்திரன் நிருபர்களிடம் கூறியதாவது:–
அநேக இடங்களில் மழைதமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை கடந்த சில நாட்களாக வலு இழந்து காணப்பட்டது.
அந்த நிலை மாறி வடகிழக்கு பருவமழை வலுப்பெற்று உள்ளது.
வங்கக்கடலில் இலங்கைக்கு அருகே தமிழக கடற்பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை நிலை கொண்டுள்ளது.
இதன் காரணமாக அடுத்து 2 நாட்களுக்கு தமிழ்நாட்டிலும், புதுச்சேரியிலும் அநேக இடங்களில் மிதமான மழை பெய்யும்.
உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மழை பெய்யும்.
சென்னையில் சில பகுதிகளில் சில நேரங்களில் மிதமான மழை பெய்யும்.
தென் மாவட்டங்களான கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், நாகப்பட்டினம் ஆகியவற்றில் தொடர்ந்து மழை பெய்யும்.
இந்த மாவட்டங்களில் மழை 18–ந்தேதி வரை நீடிக்கும். இவ்வாறு எஸ்.பாலச்சந்திரன் தெரிவித்தார்.
இதேவேளை நேற்று யாழ்ப்பாணத்தில் மழை பரவலாக பெய்துள்ளது. தமிழ்நாடு வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவித்தலின்படி யாழ்ப்பாணத்திலும் மழை தொடரக்கூடிய சாத்தியம் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.