ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மறுசீரமைப்பு பணிகளை துரிதப்படுத்துமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பணிப்புரை விடுத்துள்ளார்.
அண்மையில் ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முக்கியஸ்தர்களுக்கும் இடையில் விசேட சந்திப்பு ஒன்று நடத்தப்பட்டுள்ளது.
இந்த சந்திப்பின் போது சுதந்திரக் கட்சியை மறுசீரமைத்தல் மற்றும் அது தொடர்பான விடயங்கள் கலந்துரையாடப்பட்டுள்ளன.
கட்சி மறுசீரமைப்பு நடவடிக்கைகள் கிராம மட்டத்தில் ஆரம்பிக்கப்படும் என கட்சியின் பொதுச் செயலாளர் துமிந்த திஸாநாயக்க கொழும்பு ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
இதன்படி, கட்சி உறுப்பினர்களை இணைத்தல், கிளைகளை வலுப்படுத்தல், அதிகாரிகள் நியமித்தல், எதிர்கால தேர்தல்களின் போது கட்சி என்ற ரீதியில் வெற்றியீட்டுதல் போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளதாகவும், கட்சித்தலைவர் மைத்திரிபால சிறிசேன தலைமையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கட்சி ஒழுக்க விதிகளை மீறிச் செயற்படுவோருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.