ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தற்போதைய தலைவரான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, கட்சியின் தலைவர் பதவியை மகிந்த ராஜபக்ஸவிடம் மீண்டும் கையளிப்பார் என முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
பொலன்நறுவையில் நேற்று நடைபெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய பசில்,
முன்னாள் பிரதமர் பண்டாரநாயக்க 1959 ஆம் ஆண்டு கொலை செய்யப்பட்ட பின்னர், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் பதவி பண்டாரநாயக்க அரசாங்கத்தில் காணி மற்றும் நீர்பாசன அமைச்சராக பதவி வகித்த பொலன்நறுவையை சேர்ந்த சீ.பீ.டி சில்வாவுக்கு வழங்கப்பட்டது.
அவர் கட்சியை வழிநடத்திய தேர்தலில் கட்சி தோல்வியை தழுவியதால், அவர் சிறிமாவோ பண்டாரநாயக்கவை சந்தித்து கட்சியின் தலைவர் பதவியை அவரிடம் ஒப்படைத்தார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தற்போதைய தலைவரின் கீழ் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி கடந்த பொதுத் தேர்தலில் வரலாற்றில் என்றுமில்லாத வகையில் இருந்த நாடாளுமன்றத்தின் பலத்தையும் இழந்தது.
கட்சியின் தலைவர் பிரதிநிதித்துவப்படுத்தும் பொலன்நறுவை மாவட்டத்திலும் கட்சியை தோற்கடித்து ஐக்கிய தேசியக் கட்சி வெற்றி பெற சந்தர்ப்பம் ஏற்படுத்திக்கொடுக்கப்பட்டது.
இதனால், சீ.பீ.டி சில்வாவை போல, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தற்போதைய தலைவர், மீண்டும் கட்சியை மகிந்த ராஜபக்ஸவிடம் கையளிக்க நடவடிக்கை எடுப்பார் எனவும் பசில் ராஜபக்ஸ கூறியுள்ளார்.