உங்கள் ஜெபம் கேட்கப்பட வேண்டுமா?

நம் அருமை ஆண்டவர் நம் ஜெபத்தைக் கேட்கிறவர். அன்னாளின் ஜெபத்தைக் கேட்டு குழந்தையை தந்தார். எசேக்கியா ராஜாவின் ஆயுசு நாட்களைக் கூட்டிக் கொடுத்தார். தானியேலின் ஜெபத்தைக் கேட்டார். தாவீதின் விண்ணப்பத்திற்கு செவி கொடுத்தார்… இப்படி வேதத்திலே தொடர்ந்து வாசிக்கிறோம்.

உங்கள் ஜெபத்தையும் கேட்க தேவன் வல்லவர். உங்கள் ஜெபத்தைக் கேட்டு உங்கள் குடும்ப வாழ்வை ஆசீர்வதிப்பார். ஆனால் இன்னும் உங்கள் ஜெபம் ஒருவேளை கேட்கப்படாமல் இருந்தால், அதற்கு காரணம் என்ன என ஆராய்ந்து பார்க்க வேண்டும்.

பரிசுத்தம் பண்ணிக்கொள்ளுங்கள்

‘உங்கள் அக்கிரமங்களே உங்களுக்கும் உங்கள் தேவனுக்கும் நடுவாக பிரிவினை உண்டாக்குகிறது. உங்கள் பாவங்களே அவர் உங்களுக்குச் செவிகொடாதபடிக்கு அவருடைய முகத்தை உங்களுக்கு மறைக்கிறது’. ஏசா. (59:2)

தேவன் உங்கள் ஜெபத்தைக் கேட்கக்கூடாதபடி உங்கள் வாழ்விலும், உங்கள் குடும்ப வாழ்விலும் தேவன் வெறுக்கும் பாவங்களை அவரிடம் அறிக்கை செய்து, அந்த பாவத்தில் இருந்து விலகி இருந்தால், நிச்சயம் உங்கள் பாவங்களை ஆண்டவர் மன்னித்து உங்கள் ஜெபங்களைக் கேட்பார். உங்கள் ஜெபங் களுக்கு பதில் கொடுத்து உங்களை சந் தோஷப்படுத்துவார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக.

ஒருமனப்பட்டு ஜெபியுங்கள்

‘உங்களில் இரண்டு பேர் தாங்கள் வேண்டிக்கொள்ளப்போகிற எந்தக் காரியத்தைக் குறித்தாகிலும் பூமியிலே ஒருமனப்பட்டிருந்தால், பரலோகத்தில் இருக்கிற என் பிதாவினால் அது அவர்களுக்கு உண்டாகும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்’. (மத்.18:19)

பிரியமானவர்களே, நம் ஆண்டவர் ஒருமனப்பட்டு ஜெபிக்கிற ஜெபத்திற்கு உடனே பதில் கொடுப்பார். இந்த உலகத்திலே கணவனும், மனைவியும் ஒருமனப்பட்டு ஜெபித்தால் உங்கள் ஜெபத்தை கர்த்தர் கேட்பார். பிள்ளைகளுக்காக மற்றும் குடும்ப பிரச்சினைகளுக்காக நாம் ஒருமனப்பட்டு ஜெபித்தால் நிச்சயம் ஆண்டவர் பதில் கொடுப்பார்.

வீட்டிலே எப்பொழுது பார்த்தாலும் வாக்குவாதம் பண்ணிக் கொண்டு, சண்டை போட்டுக்கொண்டு ஜெபித்தால் எப்படி ஜெபம் கேட்கப்படும்? உங்கள் வாழ்வில் எப்படிப்பட்ட பிரச்சினைகள் இருந்தாலும் ஒருமனதோடு ஜெபியுங்கள். உங்கள் வாழ்வில் அற்புதங்களைக் காண்பீர்கள்.