திருமணத்தில் தாலி கட்டும்போது மூன்று முடிச்சு போடுவது ஏன்?

இல்லறம் அல்லது நல்லறம் அன்று என்பது அவ்வை வாக்கு. திருமணத்தை ஆயிரம் காலத்துப்பயிர் என்றனர். திருமணத்தில் சடங்கு சம்பிரதாயங்கள் எத்தனையோ இடம் பெற்றாலும், மணமகளுக்கு மணமகன் தாலி கட்டுவது தான் ஹைலைட். மாங்கல்ய தாரணம் என்று இதைக் குறிப்பிடுவர்.

திருமாங்கல்ய கயிறில் மூன்று முடிச்சு இடுவது தான் தாலிகட்டுதல். விழிப்பு, கனவு, ஆழ்ந்த உறக்கம் என்னும் மூன்று நிலைகளை இந்த முடிச்சுகள் குறிக்கும். இந்த மூன்று நிலையிலும் ஒரு பெண் தெய்வீக உணர்வுடன் இருக்க வேண்டும். எண்ணம், சொல், செயல் மூன்றாலும் தூய்மை மிக்கவளாக திகழ வேண்டும். தெய்வ பக்தி, குடும்ப பெரியவர்களிடம் மதிப்பு, கணவரிடம் அன்பு ஆகியவற்றை பின்பற்ற வேண்டும். இப்படி மூன்று முடிச்சுக்குள் எத்தனையோ காரண முடிச்சுகள் உள்ளன.

இறைவன், தேவர்கள் மற்றும் விண்ணவர்களின் சாட்சியாக போடப்படுவது முதல் முடிச்சு. முன்னோர்களின் சாட்சியாக இரண்டாவது முடிச்சு. பெற்றோர்கள், திருமணத்திற்கு வருகை தந்தவர்களின் சாட்சியாக கட்டப்படுவது மூன்றாம் முடிச்சு. அறம், பொருள், இன்பம் படி வாழ்க்கை நடத்துவோம் என்பதைக் குறிப்பதற்கு மூன்று முடிச்சு. பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்திகளின் பெயரால் உறவை உறுதிப்படுத்துவது. கணவன், மூத்தோன், இறைவன் ஆகிய மூவரின் சொற்படி நடக்க மூன்று முடிச்சு.

அம்பிகையின் மகிமையைப் போற்றும் லலிதா சகஸ்ர நாமத்தில், காமேச பந்த மாங்கல்ய சூத்ர சோபிதா கந்தரா என்று அம்பிகை போற்றப்படுகிறாள். சிவபெருமானால் கட்டப்பட்ட திருமாங்கல்யச்சரடு அலங்கரிக்கும் அழகான கழுத்தை உடையவள் என்பது இதன் பொருள்.

ஆயிரமாயிரம் ஆபரணங்களை அணிந்தாலும் அம்பிகைக்கு அழகு சேர்ப்பது மாங்கல்யம் சூடியிருக்கும் மஞ்சள் கயிறு தான். ஆதிசங்கரர், சவுந்தர்யலஹரியில் அம்பாளின் திருமாங்கல்ய மகிமையைப் போற்றுகிறார். எத்தனை நகை அணிந்தாலும், சம்பிரதாயத்தின் சின்னமான மஞ்சள் கயிற்றில் திருமாங்கல்யத்தைக் கட்டிக்கொள்வதே சிறப்பு என்பதை இது உணர்த்துகிறது.