நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்ப அரசு மேற்கொள்ளும் செயற்பாடுகளை பெடரல் நல்லிணக்கமெனக் கூறும் சிலர் அதனைப் கேவலப்படுத்துகின்றனர்.
நாட்டினதும் மக்களினதும் எதிர்காலத்துடன் விளையாட வேண்டாமென அவர்களைக் கேட்டுக்கொள்வதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார்.
கொழும்பு பண்டாரநாயக்கா ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று நடைபெற்ற ‘விங்ஸ் 2016 நம்பிக்கையின் சிறகசைப்பு’ நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.
“அனைத்து இலங்கையர்களும் இணைந்து நாட்டைக் கட்டியெழுப்பும் தேசிய பொது நிகழ்ச்சி நிரலே இன்று நாட்டுக்கு தேவையானது.
நாட்டின் எதிர்காலம் தொடர்பான நிகழ்ச்சி நிரல் ஒவ்வொருவரின் அதிகாரம் மற்றுத் தனித்துவத்தை அடிப்படையாகக் கொண்ட அரசியல் நிகழ்ச்சி நிரல் மூலம் மறைக்கப்படக் கூடாது.
நல்லிணக்கம் மற்றும் தேசிய ஒற்றுமையின் தேவையை குறைத்து மதிப்பிடக்கூடாது. நாட்டில் நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்பவதற்கு அரசு மேற்கொள்ளும் செயற்பாடுகளை பெடரல் நல்லிணக்கமெனக் கூறும் சிலர் அதனை கேவலப்படுத்துகின்றனர்.
நாட்டினதும் மக்களினதும் எதிர்காலத்துடன் விளையாட வேண்டாமென நான் அவர்களிடம் கேட்டுக்கொள்கின்றேன். அதிகாரத்தைப் பெறுவதற்கு நாடு எஞ்சியிருக்க வேண்டும்.
நாட்டின் எதிர்காலத்துக்கான தேசிய நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவதற்காக அனைவரும் ஒன்றிணைய வேண்டும்.
பண்பாடு மற்றும் கலைகள் தேசிய நல்லிணக்க செயற்பாடுகள் வெற்றி பெறுவதற்கான முக்கியமான காரணிகளாகும். அனைத்து மக்கள் பிரிவுகளுக்கிடையிலும் ஒற்றுமை, ஒத்துழைப்பு, நட்புறவு கட்டியெழுப்பப்படுவதற்கு அது உந்துசக்தியாக இருக்கும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தை மேம்படுத்தும் நோக்குடன் தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அலுவலகம், இலங்கை கலைப் பேரவை, ஐரோப்பிய ஒன்றியம், ஜேர்மன் அபிவிருத்தி ஒத்துழைப்பு மற்றும் இலங்கை கெயார் நிறுவனம் ஆகியவற்றின் இணை ஏற்பாட்டிலும் அனுசரணையிலும் இந்த கலை விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இலங்கையின் ஒன்பது மாவட்டங்களிலிருந்து இளம் கலைஞர்கள் மற்றும் 200 இற்கும் அதிகமான கலைஞர்களின் பங்குபற்றுதலுடன் கடந்த 21ஆம் திகதி கிளிநொச்சியில் ஆரம்பமான இந்நிகழ்வு ஒக்டோபர் 23ஆம் திகதிவரை அங்கு நடைபெற்றது.
27, 28, 29 ஆகிய திகதிகளில் அம்பாறையிலும் நவம்பர் 7 ஆம் திகதியிலிருந்து நேற்று வரை கொழும்பிலும் நடைபெற்றது.
இதனோடிணைந்ததாக 11, 12, 13 ஆகிய திகதிகளில் கிறீன் பாத்தில் நெலும் பொக்குண மாவத்தையில் அனைத்து கலாசாரங்களுக்குமுரிய உணவு விழாவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நேற்று நடைபெற்ற நிறைவு நிகழ்வோடு இணைந்ததாக அறிஞர்கள் மாநாடும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அலுவலகத்தின் தலைவி சந்திரிகா பண்டாரநாயக்கா குமாரதுங்க, இராஜாங்க அமைச்சர் ஏ.எச்.எம். பௌஸி ஆகியோர் உட்பட உள்நாட்டு, வெளிநாட்டு பிரமுகர்களும் அறிஞர்களும் இந்நிறைவு நிகழ்வில் பங்குபற்றினார்கள்.