கருப்பு பணத்துக்கு எதிரான நடவடிக்கையை முன்கூட்டியே கணித்த ஆற்காடு பஞ்சாங்கம்

சேலம்:

கடந்த 10 ஆண்டுக்கு முன்பு சுனாமி தாக்கியதை ஆற்காடு கா.வெ.சீதாராமய்யர் பஞ்சாங்கம் முன்கூட்டியே கணித்து வெளியிட்டு இருந்தது.

கடந்த மார்ச் மாதம் துர்முகி வரு‌ஷத்திய ஆற்காடு கா.வெ.சீதாராமய்யர் சர்வமுகூர்த்த பஞ்சாங்கத்தை ஆற்காட்டை சேர்ந்த ஜோதிடர் கே.என்.நாராயணமூர்த்தி கணித்து வெளியிட்டு இருந்தார். இதில் தமிழ்நாட்டில் ஆளும்கட்சி வெற்றி பெற்று மீண்டும் ஆட்சிஅமைக்கும் என்று கூறி இருந்தார்.

அதன்படி ஆளுங்கட்சியான அ.தி.மு.க. வெற்றி பெற்று ஆட்சியை மீண்டும் அமைத்தது.

இந்த பஞ்சாங்கத்தில் கருப்பு பண நடவடிக்கை குறித்து குறிப்பிடப்பட்டிருந்தது. அது தற்போது உண்மையாகி விட்டது. கருப்பு பண நடவடிக்கை குறித்து ஆற்காடு கா.வெ.சீதாராமய்யர் பஞ்சாங்கத்தில் கூறப்பட்டிருப்பதாவது:-

‘‘வங்கிகளில் புதிய மாற்றம் ஏற்படும். கணக்கில் இல்லாத கருப்பு பணத்தை கண்டுபிடிக்க நேரும். தணிக்கை துறையின் மூலம் அரசாங்கத்திற்கு பல கோடிக்கணக்கில் பணம் சேரும்படியான யோகம் உண்டு” இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

தற்போது 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டு உள்ளதால் கோடிக்கணக்கில் இந்த பழைய ரூபாய் நோட்டுகளை பதுக்கி வைத்திருந்தவர்கள் கணக்கு காட்டி அரசாங்கத்தில் வரி கட்டுவதற்கான சூழ்நிலை உருவாகி உள்ளது. கருப்பு பணம் கணக்கில் வரக்கூடிய நிலையும் உருவாகி உள்ளது.

மேலும் பாகிஸ்தான் இந்திய எல்லை பகுதியில் அடிக்கடி தாக்குதல் நடத்துவதையும் இந்த பஞ்சாங்கத்தில் முன்கூட்டியே கணித்து வெளியிடப்பட்டு உள்ளது.

அதாவது எல்லையில் அந்நியநாடு அடிக்கடி தாக்குதல் நடத்தும் என்று ஆற்காடு கா.வெ.சீதாராமய்யர் பஞ்சாங்கத்தில் குறிப்பிடப்பட்டு உள்ளது. அது தற்போது உண்மையாகி உள்ளது.