அமெரிக்கர்கள், இலங்கையை முன்னுதாரணமாக கொள்ள வேண்டும்!

ஜனாதிபதி தேர்தலின் முடிவுகளை ஏற்றுக் கொண்ட, இலங்கையை அமெரிக்கா முன்னுதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்று, பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

கடந்த ஜனாதிபதி தேர்தலில் மைத்திரிபால சிறிசேன வெற்றி பெற்ற போது, எவரும் அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை. மகிந்த ராஜபக்ச சுமுகமான அதிகார கைமாற்றத்தை உறுதிப்படுத்தினார்.

ஆனால், அமெரிக்காவில் அண்மைய அதிபர் தேர்தலில் தோல்வியுற்ற ஹிலாரி கிளின்டனின் ஆதரவாளர்கள், டொனால்ட் ட்ரம்பை அதிபராக ஏற்க முடியாது என்று தெரிவித்து, எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுகின்றனர்.

இலங்கையில் 2015 அதிபர் தேர்தல் இறுதி முடிவுகள் வெளியாக முன்னரே, தற்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து சுமுகமாக அதிகாரத்தை கைமாற்றுவது குறித்து மகிந்த ராஜபக்ச பேச்சு நடத்தினார்.

மகிந்தவுக்கு ஆதரவாக இராணுவத்தினர் புரட்சியில் ஈடுபட்டு சிறிசேன அதிகாரத்துக்கு வருவதை தடுக்கவிருப்பதாக செய்திகள் வெளியாகின.

எனினும் எந்த புரட்சியும் இடம்பெறவில்லை. ராஜபக்ச தேர்தல் முடிவுகளை ஏற்றுக் கொண்டு, பதவியை விட்டு விலகிச் சென்றார் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.