பிரதமர் நரேந்திரமோடி கடந்த வாரம் ரூ.500, ரூ.1000 நோட்டுக்கள் செல்லாது என்று அதிரடியாக அறிவித்தவுடன் நாட்டில் பல்வேறு பிரச்சனைகள் தோன்றியது. இதனால் ஏழை, எளிய மக்கள் பலவழிகளில் பாதிக்கபட்டனர். எதிர்க்கட்சிகள் இந்த நடவடிக்கையை எதிர்த்து குரல் கொடுத்து வந்தாலும் பெரும்பாலானோர் இந்த நடவடிக்கையை ஆதரித்தும் வருகின்றனர். ஆனால் அதே நேரத்தில் பொதுமக்கள் படும் இன்னல்களுக்கு மாற்று வழி தேடவும் அவர்கள் வற்புறுத்தி வருகின்றனர். இந்நிலையில் இதுகுறித்து இளையதளபதி விஜய் சற்றுமுன் தனது கருத்தை செய்தியாளர்கள் மூலம் பகிர்ந்து கொண்டார். விஜய் கூறியது இதுதான்:
பிரதமர் எடுத்துள்ள இந்த முடிவு உண்மையில் மிக மிக துணிச்சலான முடிவு என்பதை முதலில் தெரிவித்து கொள்கிறேன். நம் நாட்டிற்கு தேவையான, வரவேற்கத்தக்க முடிவு என்பது மட்டுமின்றி நம் நாட்டின் பொருளாதாரத்தை இந்த நடவடிக்கை நிச்சயம் வளர்க்கும் என்பதில் யாருக்கும் சந்தேகமும் இல்லை. ஒரு நோக்கம் பெரிதாக இருக்கும்போது அதனால் ஏற்படும் பாதிப்பு சின்ன சின்னதாக இருக்கத்தான் செய்யும். ஆனால் அந்த பாதிப்புகள் அந்த நோக்கத்தை விட பெரியதாகி விடாமல் நாம் எல்லோரும் பார்த்து கொள்ள வேண்டும்
பொதுமக்கள் தங்கள் அன்றாட தேவைகளான சாப்பாடு, மருந்து பொருட்கள் வாங்குதல், வெளியூர் சென்றவர்கள் வீடு திரும்பாமல் இருப்பதி, தியேட்டர்கள், மால்கள் வியாபாரிகள் ஆகியோர்கள் வியாபாரம் இன்றி பாதிக்கப்படுவதை தவிர்த்திருக்கலாம்
ஒருசில செய்திகள் படித்தவுடன் எனது மனதை பாதித்தது. பேத்தியின் திருமணத்திற்கு நிலத்தை விற்ற ஒரு முதிய பெண், தன்னிடம் உள்ள ரூபாய்கள் செல்லாது என்பதை அறிந்து தற்கொலை செய்யும் அளவுக்கு சென்றதும், மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்ற குழந்தை ஒன்று ரூபாய் நோட்டு செல்லாது என்று கூறிய காரணத்தால் சிகிச்சை மறுக்கப்பட்டு மரணம் அடைந்த போன சம்பவம் ஆகியவற்றை தவிர்த்திருக்கலாம்
நம் நாட்டில் 20% பணக்காரர்கள் இருப்பார்களா? அவர்களில் ஒரு குறிப்பிட்ட சதவீதத்தினர் செய்த தவறுக்காக மீதியுள்ள 80% மக்கள் பாதிக்கப்படுவது எந்த விதத்தில் நியாயம்?
நான் திரும்ப திரும்ப கூறும் ஒரு விஷயம் என்னவென்றால் இதுவரை யாரும் செய்யாத, யோசிக்க கூட இல்லாத ஒரு விஷயத்தை இந்த அரசு செய்தது உண்மையிலேயே சாதனைதான். இதில் எந்த தவறும் இல்லை. ஆனால் அதே நேரத்தில் இதுபோன்ற முக்கியமான அறிவிப்பு வெளியிடுவதற்கு முன்னால் இதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து முன்கூட்டியே ஆலோசித்து அதற்கான முன்னேற்பாடுகளை செய்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும் என்பதுதான் என்னுடைய தாழ்மையான கருத்து
இன்றுமுதல் ஓரளவுக்கு நிலைமை சீரடைந்ததாக கேள்விப்பட்டேன். ஆனாலும் இன்னும் கிராம உள்ள மற்றும் சீனியர் சிட்டிசன் ஆகியோர்களுக்கு ஏற்பட்டிருக்கும் பிரச்சனைகளை விரைவில் தீர்க்க இந்த அரசு முன்வர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்