முழு நாட்டையும் விற்று விட்டு இலாபம் தேடும் முயற்சிக்கு அடித்தளமாகவே இந்த வரவு செலவு திட்டம் அமைந்துள்ளது, என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச குற்றம் சுமத்தினார்.
வரவு செலவு திட்டம் தொடர்பான இன்றைய பாராளுமன்ற விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில்,
மகிந்த ஆட்சியின் போது அமைத்த அனைத்தும் தற்போது விற்கப்படுகின்றது. விற்பனை செய்வது என்பது இலகு, ஆனால் உருவாக்குவது என்பது கடினம் கடந்த காலத்தில் அமைக்கப்பட்ட அனைத்தும் இப்போது விற்கப்படுகின்றது.
மகிந்த ஆட்சியின் போது துறைமுக நகரத்தினை உருவாக்கும் திட்டம் முன்வைக்கப்பட்ட சந்தர்ப்பத்தில், சீன நாட்டிற்கு இலங்கையை விற்கின்றோம், என கூக்குரல் எழுப்பியவர்கள் இப்போது அதனையே செய்து வருகின்றார்கள்.
மக்களை தொடர்ந்தும் ஏமாற்றும் வகையிலேயே நல்லாட்சி செயற்பட்டு வருகின்றது. விவசாயம், கல்வி, அபிவிருத்தி உட்பட அனைத்து துறைகளிலுமே மக்கள் ஏமாற்றப்பட்டு வருகின்றார்கள்.
இளைஞர் யுவதிகள் இம்முறை வரவு செலவு திட்டத்தின் மூலத்தில் வேலைவாய்ப்பு கிடைக்கும் என நம்பிக்கை கொண்டிருந்தார்கள், ஆனால் அனைவருமே ஏமாற்றப்பட்டுள்ளார்கள்.
நாட்டை அபிவிருத்தி செய்யாவிட்டாலும் பரவாயில்லை, குறைந்தபட்சம் தேர்தலின் போது கொடுத்த வாக்குறுதிகளையாவது நிறைவேற்றுங்கள் எனவும் நாமல் கேட்டுக்கொண்டார்.