கணவரின் சடலத்துக்கு உரிமை கோரும் மூன்று மனைவியர்! கம்பஹாவில் விசித்திரம்

“இது எனது கணவர்” என சடலமொன்றுக்கு மூன்று பெண்கள் உரிமை கோரி நீதிமன்றின் உதவியை நாடியுள்ளனர்.

கம்பஹா மேலதிக நீதவான் நீதிமன்றில் இந்த விசித்திரமான சம்பவம் இடம்பெற்றுள்ளது.

வாகன விபத்து ஒன்றில் உயிரிழந்த நபர் தமது கணவர் எனவும் அவரது சடலத்தை தம்மிடம் ஒப்படைக்குமாறும் கோரி மூன்று பெண்கள் உரிமை கோரியுள்ளனர்.

குறித்த மூன்று பெண்களும் சட்ட ரீதியான விவாக சான்றிதழ்களை சமர்ப்பித்துள்ளனர்.

பிள்ளைகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் உயிரிழந்தவரின் இறுதிக் கிரியைகளை நடத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு மூன்று பெண்களுக்கும், கம்பஹா மேலதிக நீதவான் லலித் கண்ணங்கர உத்தரவிட்டுள்ளார்.

யக்கல கிரிந்திவெல வீதியில் கடந்த 13ம் திகதி மோட்டார் சைக்கிளில் சென்ற 44 வயதான சரத் பண்டார என்பவர் விபத்துக்கு உள்ளாகி படுகாயமடைந்து கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி அதே தினத்தில் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவரின் பிரேதப் பரிசோதனை கடந்த 14ம் திகதி கம்பஹா பெரியாஸ்பத்திரியில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

உயிரிழந்தவரின் சடலத்தை பொறுப்பேற்றுக்கொள்ள மூன்று மனைவியர் வைத்தியசாலையில் முன்னிலையாகியுள்ளனர்.

இதன் காரணமாக குறித்த சம்பவம் தொடர்பில் நேற்று பொலிஸார் நீதிமன்றிற்கு அறிவித்திருந்தனர்.

உயிரிழந்தவரின் சடலம் கம்பஹா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்த நபர் ரம்புக்கன கொட்டுவல்ல பிரதேசத்தில் 1996ம் ஆண்டில் பெண் ஒருவரை சட்ட ரீதியாக திருமணம் செய்து கொண்டுள்ளார்.

மேலும் 2005ம் ஆண்டில் தெரனியகல மஹாவதென்ன மற்றும் மல்வத்துகிரி பிட்டிய அபகஸ்பிட்டிய என்னும் பகுதிகளைச் சேர்ந்த இரண்டு பெண்களையும் சட்டரீதியாக திருமணம் செய்து கொண்டுள்ளார்.

உயிரிழந்த நபரின் ஒரு மனைவிக்கு தலா இரண்டு பிள்ளைகள் என்ற அடிப்படையில் மொத்தமாக ஆறு பிள்ளைகள் இருக்கின்றார்கள்.

இந்த மூன்று குடும்பத்தையும் உயிரிழந்த நபர் நன்றாக பராமரித்துள்ளார் என நீதிமன்றில் அறிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர் கட்டுநாயக்க பிரதேசத்தில் தொழிலில் ஈடுபட்டவர் எனவும், இரகசியமான முறையில் மூன்று பெண்களுடனும் குடும்பம் நடத்தியுள்ளார்.

இறுதியாக திருமணம் செய்து கொண்ட பெண், பத்து ஆண்டுகள் குடும்பம் நடத்திய தமது கணவரின் சடலத்தை ஒரு மணித்தியாலமேனும் வீட்டில் வைத்திருக்க அனுமதியளிக்குமாறு கோரியுள்ளார்.