நடிகர் சங்க நிர்வாகிகளுக்கு எதிராக அதிருப்தி அணியை சேர்ந்த உறுப்பினர்கள் சிலர் ஏற்கனவே நடிகர் சங்க அலுவலகத்தில் முற்றுகை போராட்டம் நடத்தினார்கள். இதைத்தொடர்ந்து சில உறுப்பினர்கள் சங்கத்தில் இருந்து நீக்கப்பட்டனர். மேலும் பலருக்கு உங்களை ஏன் நீக்கக் கூடாது என்று விளக்கம் கேட்டு நோட்டீசு அனுப்பப்பட்டுள்ளது.
இந்தநிலையில் தயாரிப்பாளர்கள் சங்க உறுப்பினர் பொறுப்பில் இருந்து விஷால் தற்காலிகமாக நீக்கப்பட்டார்.
தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகளுக்கு எதிராக செயல்படுவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கூறப்பட்டது.
இதனை நடிகர் சங்கத்தின் அதிருப்தியாளர்கள் வரவேற்றத்துடன், அந்த கோஷ்டியை சேர்ந்த சங்கைய்யா தலைமையில் ஏராளமானோர் சென்னை தியாகராயநகர் அபிபுல்லா சாலையில் உள்ள நடிகர் சங்க வளாகத்தில் உள்ள வித்ய கணபதி கோவிலில் 108 தேங்காய் உடைத்து காணிக்கை செலுத்துவதற்காக நேற்று திரண்டனர்.
நடிகர் சங்கத்தின் நுழைவுவாயில் கதவை திறந்து உள்ளே செல்ல முயன்றனர். ஆனால், நடிகர் சங்க அலுவலகத்தில் இருந்த ஊழியர்களும், உறுப்பினர்களும் கதவை பூட்டி அவர்களை உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை. இதையடுத்து நடிகர் சங்க நுழைவுவாயில் முன்பு 108 தேங்காயை உடைத்தனர்.
அவர்களை தேங்காயை உடைக்கக் கூடாது என்று விஷால் ஆதரவாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் இருதரப்பினருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டு மோதல்-கைகலப்பு உருவானது.
சம்பவம் குறித்து தகவலறிந்து போலீசார் விரைந்து வந்தனர். இருதரப்பினரையும் அப்புறப்படுத்தி மோதலை தவிர்த்தனர். தொடர்ந்து அங்கு பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டனர். இதனால் அப்பகுதியில் நேற்று பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதற்கிடையே துணை நடிகைகள் கோவை லட்சுமி, ராணி உள்ளிட்ட 15 பேர் நேற்று போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு வந்தனர். அங்கு புகார் மனு ஒன்றை அளித்தனர்.
அதில், நடிகர் சங்க செயலாளர் விஷால், துணைத்தலைவர் பொன்வண்ணன், மேலாளர் பாலமுருகன் ஆகியோர் தூண்டுதலின்பேரில், அவர்களுடைய அடியாட்கள் தங்கள் மீது தாக்குதல் நடத்தினார்கள் என்றும், தங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்’ என்றும் குறிப்பிட்டிருந்தனர். அந்த புகார் மனு விசாரணைக்காக தியாகராயநகர் துணை கமிஷனருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.