மொட்டை கோபுரத்தில் காதல்ஜோடி 2 நாள் தங்கியிருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தை அடுத்த தாராசுரத்தில் உலக புகழ்பெற்ற, யுனஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்ட ஐராவதீஸ்வரர் கோயில் உள்ளது.
இங்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வர். இந்த கோயில் முன்புறம் மொட்டை கோபுரம் பல ஆண்டுகளாக சிதிலமடைந்து உருக்குலைந்துள்ளது.
அந்த மொட்டை கோபுரத்தில் 2 நாள் முழுவதும் இளம் காதல்ஜோடி தங்கியிருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து அப்பகுதியில் உள்ளவர்கள் கூறியதாவது,
நேற்றுமுன்தினம் இரவு 9 மணியளவில் கோயிலின் கிழக்கு திசையில் இருட்டில் இரு உருவங்கள் நடமாடியதை பார்த்தோம்.
அங்கு சென்றபோது இரு உருவங்களும் மறைந்து விட்டன.
இதனால் சந்தேகமடைந்த கோயில் பிரகாரம் முழுவதும் தேடினோம்.
ஆனால் எங்கேயும் காணவில்லை.
அப்போது கிழக்கு திசையில் காலடி சத்தம் கேட்டது, அங்கு சென்றபோது, பல ஆண்டுகளாக சிதிலமடைந்து, பராமரிப்பு இல்லாமல் செடிகள், மரங்கள் முளைத்துள்ள பகுதியிலிருந்து சத்தம் வந்தது.
இதனால் பொதுமக்கள் செல்போன் லைட் உதவியுடன் தேடிப்பார்த்த போது 20 வயது வாலிபரும், 19 வயது இளம்பெண் ஒருவரும், இருப்பதை கண்டு திடுக்கிட்டோம். பொதுமக்களை பார்த்ததும் காதலர்கள் செய்வதறியாது விழித்தபடி நின்றனர்.
அவர்களிடம் விசாரித்தபோது இளம்பெண், தாராசுரம் பகுதியை சேர்ந்தவர் என்றும், வாலிபர், கும்பகோணத்தில் உள்ள தனியார் ஓட்டலில் வேலை செய்து வருவதாகவும் கூறினர்.
மேலும் அவர்கள் கடந்த 2 நாட்களாக கோயில் மொட்டை கோபுரத்தில் தங்கியிருந்ததாகவும் கூறினர்.
பின்னர் இருவரையும் கோயில் வளாகம் பகுதிக்கு அழைத்து வந்தோம்.
இதுகுறித்து இளம்பெண்ணின் பெற்றோருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
இதையறிந்ததும், அவர்கள் தலைமறைவாகி விட்டனர்.
அவர்களை தேடியபோது, தாராசுரம் பேருந்து நிலையத்தில் இருவரும் இருப்பது தெரியவந்தது.
அங்கிருந்து இளம்பெண்ணை மட்டும் பெற்றோர்கள் வீட்டுக்கு அழைத்து சென்றுள்ளனர்.