சோனியா அகர்வால் மற்றும் புதுமுகங்கள் சந்தோஷ் கண்ணா, காயத்ரி ஆகியோர் நடித்துள்ள படம் ‘சாயா.’ இந்த படத்தை வி.எஸ்.பழனிவேல் இயக்கி தயாரித்து உள்ளார். சாயா படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னை வடபழனியில் நடந்தது. விழாவில் நடிகை நமீதா கலந்து கொண்டு பேசியதாவது:-
“சமூக கருத்தை சொல்லும் படமாக சாயா தயாராகி உள்ளது. அரசியலும் சினிமாவும்தான் சமூக விஷயங்களை சார்ந்து இருக்கின்றன. இவற்றின் மூலமாகத்தான் சமூகத்துக்கு நல்லது செய்ய முடியும். அதனால்தான் நான் அரசியலில் ஆர்வம் காட்டி வருகிறேன். கல்வி அதிக செலவு கொண்டதாக மாறி இருக்கிறது. குழந்தைகளை பள்ளி, கல்லூரிகளில் சேர்ப்பதற்கு அதிக கட்டணம் கொடுக்க வேண்டி இருக்கிறது.
குழந்தைகளுக்கு நல்ல பெற்றோர்களாக இருப்பது முக்கியம். குழந்தைகளுக்கு எதிரான பாலியல் தொல்லைகள் சமூகத்தில் நிறைய நடக்கின்றன. நம் அருகில் இருந்தும் கூட இதுபோன்ற குற்றங்கள் நடக்கத்தான் செய்கின்றன. இவை தடுக்கப்பட வேண்டும். பெற்றோர்கள் குழந்தைகளை கவனமாக வளர்க்க வேண்டும். நல்லது கெட்டது பற்றி அவர்களுக்கு சொல்லி கொடுக்க வேண்டும்.
குழந்தைகளுக்கு நல்ல கல்வி, நல்ல டியூசன் கொடுத்தால் மட்டும் போதாது. நிறைய நல்ல விஷயங்கள் பற்றி சொல்லி கொடுக்க வேண்டும். எது நல்ல தொடுதல் எது கெட்ட தொடுதல் என்பதையும் சொல்லி கொடுக்க வேண்டும். குழந்தைகளிடம் நிறைய பேசுங்கள். நிறைய கேளுங்கள். இதை அம்மா, அப்பா இரண்டு பேருமே செய்ய வேண்டும்.”
இவ்வாறு நமீதா பேசினார்.
விழாவில் நடிகர் ஸ்ரீகாந்த் கலந்து கொண்டு பேசும்போது, “சினிமா விழாக்களுக்கு என்னை அழைத்தால் நான் கலந்துகொள்ள தவறுவது இல்லை. இந்த படத்தில் நடித்துள்ள சோனியா அகர்வால் இங்கு வரவில்லை. பட விழாக்களுக்கு பிரபலங்களை அழைக்கும்போது சாக்குபோக்கு சொல்லி தவிர்த்து விடுகிறார்கள். இது வேதனை அளிக்கிறது. விழா நடத்துபவர்களின் வலிகளை புரிந்து கொண்டு விழாக்களில் கலந்து கொள்ள வேண்டும்” என்றார்.
நடிகர் கராத்தே ராஜா, நடிகை வசுந்தரா, தயாரிப்பாளர் சங்க கில்டு தலைவர் ஜாகுவார் தங்கம், தயாரிப்பாளர் சசிகலா பழனிவேல், இசையமைப்பாளர் ஏ.சி.ஜான்பீட்டர் ஆகியோர் கலந்து கொண்டனர்.