ரியல் எஸ்டேட் துறையில் கொடி கட்டி பறக்கும் அவர், ஏராளமான சொத்துக்களை சம்பாதித்துள்ளார். அவருடைய இன்றைய சொத்தின் மதிப்பு ரூ. 22 ஆயிரம் கோடி.
டொனால்டு டிரம்ப் பெரும் பணக்காரராக இருப்பதாலோ என்னவோ? பெரும் ஆடம்பரக்காரராகவும் வாழ்ந்து வருகிறார். அவருக்கு நியூயார்க்கில் உள்ள மான்காட்டனில் மத்திய பூங்காவுக்கு அருகே 58 மாடி கொண்ட பிரமாண்ட கட்டிடம் உள்ளது.
இந்த கட்டிடத்தின் மேல் தளத்தில் உள்ள 3 அடுக்குகளை தனது வீடாக மாற்றி இருக்கிறார். இந்த வீடு மிகப்பிரமிக்க தக்க வகையில் அமைந்துள்ளது. 30 ஆயிரம் சதுரடி அடி பரப்பில் வீடு இருக்கிறது. பல்வேறு அறைகள், வரவேற்பு கூடம், படுக்கை அறை என தனி அரண்மனை போல அந்த வீட்டை அமைத்துள்ளார்.
டிரம்புக்கு 3 மனைவிகள். முதல் 2 மனைவிகளை விவாகரத்து செய்து விட்ட அவர், தற்போது 3-வது மனைவி மெலினியாவுடன் இந்த வீட்டில் வசித்து வருகிறார். மெலினியா மூலம் பாரன் என்ற 10 வயது மகன் இருக்கிறான். 3 பேரும்தான் இந்த வீட்டில் வசித்து வருகிறார்கள்.
வீடு முழுவதும் எங்கு பார்த்தாலும் தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. அதன் நுழைவு வாயில் கதவு வைரம் மற்றும் தங்க தகடுகளால் வார்க்கப்பட்டு மிக அழகாக காட்சி அளிக்கிறது. உள்ளே சென்றதும் மிக விசாலமான வரவேற்பு அறை இருக்கிறது. இந்த அறையின் மேற்கூரை முழுவதும் தங்க தகடுகள் மற்றும் விலை உயர்ந்த மார்பிள்கள், கிறிஸ்டல் கற்கள் போன்றவற்றால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.
இதை தொடர்ந்து ஓய்வு அறை, அலுவலக அறை, படுக்கை அறை, சாப்பாட்டு அறை, குடும்பத்தினருடன் அமர்ந்திருக்கும் அறை, மனைவியின் அலுவலக அறை என பல்வேறு அறைகள் இருக்கின்றன. ஒவ்வொரு அறையும் வித்தியாசமான முறையில் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.
பிரெஞ்சு மன்னன் 14-ம் லூயியின் வெர் சல்லர்ஸ் அரண்மனையை பார்த்த டொனால்டு டிரம்ப் அதே போலவே இந்த மாளிகையையும் அலங்காரம் செய்ய சொல்லி இருக்கிறார். இதற்காக பிரபல கட்டிட வடிவமைபு நிபுணர் ஆன்ஜிலோ டோங்கியோ இந்த வீட்டை அலங்கரித்து கொடுத்துள்ளார். வெர் சல்லர்ஸ் அரண்மனையின் ஒவ்வொரு அறைகளும் எந்த தோற்றத்தில் இருந்தனவோ அதே போன்றே இங்குள்ள அறைகளும் அலங்கரிக்கப்பட்டுள்ளன.
14-ம் லூயி பயன்படுத்திய இருக்கைகள், மேஜைகள் மற்றும் அலங்கார பொருட்கள் போலவே இங்கே அத்தனை பொருட்களும் உள்ளன.
ஒவ்வொரு இருக்கையின் கைப்பிடிகள், இருக்கை, மேஜையின் ஓர பகுதிகள் அனைத்தும் தங்கத் தகடுகளால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. மன்னர் கால இருக்கைகள் மட்டுமல்ல, நவீன கால ஷோபாக்களும் இவரது அறையில் இடம் பெற்றுள்ளன. அவற்றின் கைப்பிடிகள் மற்றும் ஓர பகுதிகளும் தங்க தகடுகளால் உருவாக்கப்பட்டுள்ளன.
சாப்பாட்டு அறையில் உள்ள பெரும்பாலான குவளைகள், கிண்ணங்கள் தங்கத்தால் செய்யப்பட்டுள்ளன. சாப்பாட்டை எடுத்து வருவதற்கு பயன்படுத்தும் தட்டும் தங்கத்தால் ஆனது. பழச்சாறுகளை அருந்துவதற்காக விசேஷமாக தயாரிக்கப்பட்ட குவளைகள் பயன்படுத்தப்படுகின்றன. கண்ணாடியால் தயாரிக்கப்பட்ட இதன் கைப்பிடி மற்றும் ஓர பகுதிகள் தங்கத்தால் உருவாக்கப்பட்டுள்ளன.
அறைகளில் இருக்கும் திரை சீலைகளில் கூட தங்க இழைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இவையும் பிரெஞ்சு மன்னர்கள் பயன்படுத்திய திரை சீலைகள் போலவே உருவாக்கப்பட்டு இருக்கிறது. ஒவ்வொரு அறையிலும் பல லட்சம் மதிப்புள்ள பழங்கால அலங்கார பொருட்கள் இருக்கின்றன.இத்துடன் கிரேக்க அப்பல்லோ கடவுளின் தங்க சிலையும் அவரது அறையில் அலங்கார பொருளாக இருக்கிறது. அறையின் மேல் பகுதி மற்றும் பக்கவாட்டு பகுதிகளில் பிரமாண்ட ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. அவை விளக்கு வெளிச்சத்தில் ஜொலிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஓவியங்களும் கிரேக்க பாரம்பரிய ஓவியங்களாக இருக்கின்றன.
டிரம்ப் பிரத்யேகமாக பயன்படுத்துவதற்காக விசேஷ ஆசனம் ஒன்று உள்ளது. இது பிரெஞ்சு மன்னன் 15-ம் லூயி பயன்படுத்திய சிம்மாசனம் போன்றே வடிவமைக்கப்பட்டுள்ளது. இதிலும் கைப்பிடிகள் மற்றும் ஓர பகுதிகள் தங்க தகடுகளால் உருவாக்கப்பட்டு இருக்கிறது.
வீட்டில் உள்ள அறை கதவு, ஜன்னல் கதவு அனைத்திலும் உள்ள கைப்பிடிகள் தங்கம் மற்றும் வைரத்தால் உருவாக்கப்பட்டுள்ளது. கதவு ஜன்னல்கள் கிரிஸ்டல் கற்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. டிரம்ப் சிறு வயது முதல் இப்போது குடும்பத்துடன் உள்ள புகை படங்களை பிரேம் போட்டு தனி மேஜையில் அலங்கரித்து வைத்துள்ளார். இந்த புகைப்பட பிரேம்கள் பிளாட்டினத்தால் ஆனவை. அதில், வைரகற்கள் பதிக்கப்பட்டுள்ளன. இவரது படுக்கை அறை சொர்க்கலோகம் போல காட்சி அளிக்கிறது.
மனைவி மெலினியாவும் ஆடம்பர பிரியராகவே இருக்கிறார். அவரது அலுவலக அறையில் உள்ள மேஜையும் தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. அவருக்கு மஞ்சள் ரோஜா என்றால் மிகவும் பிடிக்கும். அந்த மேஜையில் விசேஷமாக தயாரிக்கப்பட்ட மஞ்சள் ரோஜா பூக்கள் அலங்காரமாக வைக்கப்பட்டு இருக்கிறது. அந்த அறையிலும் ஏராளமான தங்கத்தால் உருவான அலங்கார பொருட்கள் இருக்கின்றன.
மகன் பாரன் விளையாடுவதற்காக விதவிதமான பொம்மைகளை டிரம்ப் வாங்கி கொடுத்துள்ளார். கார்கள், விமானங்கள் மற்றும் பல்வேறு தானியங்கி பொம்மைகள் இருக்கின்றன. இவை ஒவ்வொன்றும் பல லட்சம் மதிப்புள்ளவை. அவனுக்கு மெர்சிடஸ் பென்ஸ் நிறுவனத்தில் இருந்து விசேஷமாக தயாரிக்கப்பட்ட பொம்மை கார் ஒன்று வாங்கி கொடுத்துள்ளார். பேட்டரியில் இயங்கும் இந்த காரின் விலை மட்டுமே ரூ.28 லட்சம்.
பாரன் பிறந்தபோது தள்ளி செல்லும் வண்டிபோல தங்கத்தால் ஆன ஒரு தொட்டில் தயாரிக்கப்பட்டது. பாரன் விளையாட பயன் படுத்தும் பொம்மைகளின் விலை மட்டுமே பல கோடி ரூபாய் இருக்கும். மொத்தத்தில் டிரம்ப் ஒரு மன்னர் போலவே இந்த வீட்டில் வாழ்ந்து கொண்டு இருக்கிறார். இந்த வீட்டின் தற்போதைய மதிப்பு ரூ.650 கோடி.