கனடா நாட்டில் ஓய்வு பெற்ற மூதாட்டி ஒருவர் ஒரே நாளில் ரூ.740 கோடிக்கு அதிபதியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
கனடா நாட்டில் லோட்டோ மேக்ஸ் லாட்டரி மூலம் பெரும் பரிசு தொகை வழங்கப்பட்டு வருகிறது. நாடு முழுவதும் விற்பனை ஆகும் இந்த லாட்டரிகளை எங்கு வேண்டுமானாலும் விலைக்கு வாங்கிகொள்ளலாம்.
இந்நிலையில், அண்மையில் அல்பேர்ட்டா மாகாணத்தில் குறிப்பிட்ட ஒரு லோட்டோ மேக்ஸ் லாட்டரி கூப்பன் விற்பனை ஆகியுள்ளது. இதே மாகாணத்தில் உள்ள இர்மா என்ற கிராமத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற மூதாட்டி ஒருவர் அந்த கூப்பனை வாங்கியுள்ளார்.
கடந்த வெள்ளிக்கிழமை அன்று ஒரு வணிக வளாகத்திற்கு சென்று தனது கூப்பனை பரிசோதனை செய்துள்ளார். அப்போது, 50 மில்லியன் டொலர்(740,72,50,000 இலங்கை ரூபாய்) பரிசு தொகை தனக்கு கிடைத்துள்ளது என்பதை அறிந்து மூதாட்டி மகிழ்ச்சியின் எல்லைக்கு சென்றுள்ளார்.
எனினும், கூப்பனை பரிசோதனை செய்த நபருக்கு சந்தேகம் இருந்ததால் அவரது மேலாளரை சந்தித்து உறுதிப்படுத்த சென்றுள்ளார். சில நிமிடங்களுக்கு பிறகு திரும்பிய அவர் மூதாட்டிக்கு பரிசு தொகை கிடைத்துள்ளது உண்மை தான் என அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் பேசியபோது, ‘பொதுவாக பெரிய தொகை பரிசுகள் எல்லாம் நகரங்களில் வாழும் மக்களுக்கு தான் கிடைக்கும். ஆனால், இப்போது முதன் முதலாக 500 குடிமக்கள் மட்டுமே வசிக்கும் இர்மா கிராமவாசிக்கு இந்த பரிசு கிடைத்துள்ளது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
மூதாட்டிக்கு பெரிய தொகை பரிசாக கிடைத்துள்ளதால் அவருக்கு ஆபத்து எதுவும் ஏற்படக்கூடாது என்பதால் மூதாட்டி குறித்து எந்த தகவல்களும் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.