செல்போன் செல்லங்களின் கவனத்துக்கு!

செல்போன் கதிர்வீச்சுகள் பற்றி நீண்ட நாட்களாகவே சர்ச்சைகள் உண்டு. அதன் பாதிப்புகள் இதுவரை உறுதிப்படுத்தப்படாவிட்டாலும், செல்போனிடம் இருந்து சற்று தள்ளி நிற்பதே நல்லது என்பதை ஆராய்ச்சியாளர்கள் தொடர்ந்து கூறி வருகிறார்கள். நம் வாழ்வில் தவிர்க்க முடியாத இடத்தில் செல்போன் இருக்கும்போது, அதனிடமிருந்து எப்படி தள்ளியிருப்பது என்று கேட்பவர்களுக்காக எளிமையான சில ஆலோசனைகளை நிபுணர்கள் கூறுகிறார்கள்…

செல்போனை உடலுக்கு நெருக்கமாக வைத்திருப்பதும், பயன்படுத்துவதும் தவறு. முடிந்தவரை அதற்கும் நமக்கும் இடைவெளி தேவை. உதாரணத்துக்கு, அலுவலகத்தில் வேலை பார்க்கும்போது உங்கள் பாக்கெட்டில் வைத்துக் கொள்வதைவிட மேஜை மேல் வைத்துக் கொள்ளலாம்.”நீண்ட நேரம் செல்போனை பயன்படுத்துகிறவர்கள் நேரடியாகப் பயன்படுத்தாமல் ஹெட்செட்டை பயன்படுத்தலாம்.

எல்லாவற்றுக்குமே செல்போனில் பேசித்தான் தகவல் சொல்ல வேண்டும் என்பதில்லை. வாட்ஸ் அப், டெக்ஸ்ட் மெசேஜாகவும் தகவல்களைப் பரிமாறிக் கொள்ள முடியும். முடிந்த வரை ஸ்பீக்கரின் மூலம் உரையாடுவதும் செல்போனுக்கும் உங்களுக்கும் இடையே இருக்கும் நெருக்கத்தைக் குறைக்கும். இதன்மூலம் வேறு வேலைகள் செய்துகொண்டும் செல்போனை பயன்படுத்த முடியும்.

உலோகமும் தண்ணீரும் மின்சாரத்தைக் கடத்தும் என்பது நாம் அறிந்ததுதான். செல்போன் அலைகளும் கிட்டத்தட்ட அப்படியே. எனவே, உலோகங்களாலான செல்போன், உலோகங்களாலான கவர் இல்லாமல் இருப்பது நல்லது.

தண்ணீரும் செல்போன் அலைகளைக் கடத்தும் என்பதால் குளிக்கும்போதோ, துணி துவைக்கும்போதோ, குளித்து முடித்த ஈரத்தலையுடனோ செல்போனை பயன்படுத்தாமல் இருப்பதும் பலன் தரும்.

வெளியிடங்களுக்குச் செல்லும்போது செல்போன் பயன்படுத்தித்தான் ஆக வேண்டும். வீட்டிலோ, அலுவலகத்திலோ இருக்கும்போது லேண்ட்லைன் போனை பயன்படுத்துவது இன்னோர் எளிய வழி. சட்டை பாக்கெட்டில் வைக்கும் செல்போனால் இதயம் தொடர்பான பிரச்னைகளும், பேண்ட் பாக்கெட்டில் வைக்கும்போது மலட்டுத்தன்மை உருவாகவும் வாய்ப்பிருக்கலாம் என்ற அச்சமும் நீண்ட நாட்களாக உண்டு.

குழந்தைகளின் செல்போன் பயன்பாடு முற்றிலும் கண்காணிப்புக்குரியது. கேம்ஸ் விளையாடுவது, சினிமா பார்ப்பது என்று எல்லாவற்றுக்குமே செல்போன் பயன்படுத்துவதை விட அதற்கு மாற்று வழிகளைச் சொல்லிக் கொடுங்கள். 10 வயதில் ஒரு குழந்தை செல்போன் பயன்படுத்த ஆரம்பித்தால் அந்த குழந்தையின் செல்போன் பயன்பாட்டின் காலம் நம்மைவிட பல மடங்கு அதிகம் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இதயம், சிறுநீரகம் போன்ற முக்கியமான அறுவை சிகிச்சைகள் செய்துகொண்டவர்கள் செல்போன் பயன்பாட்டை முடிந்த வரை குறைத்துக் கொள்வதும் நல்லது.