ரஜினிகாந்த் வீட்டில் வருமான வரி சோதனை?

நடிகர் ரஜினிகாந்த் மற்றும் தொழில் அதிபர்களின் வீடுகளில் சோதனை நடத்த வேண்டுமென வலியுறுத்தி வருமான வரித் துறை அலுவலகத்தில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது.

கறுப்பு பணத்தை ஒழிக்கும் வகையில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி புழக்கத்தில் இருந்த 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை தடை செய்தார்.

இந்த அறிவிப்பு வெளியான சில மணி நேரத்தில் நடிகர் ரஜினிகாந்த் அதை வரவேற்று புதிய இந்தியா பிறந்துள்ளது என்று கருத்து தெரிவித்தார்.

இந்த கருத்துக்கு தமிழகமெங்கும் பரவலாக எதிர்ப்பும் ஆதரவும் பெருகியது. இந்த நிலையில்,

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரித் துறை அலுவலகத்தில் இந்திய தேசிய லீக் கட்சியின் சார்பில் அதன் மாநில தலைவர் அப்துல் ரஹீம் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.

அதில் தமிழகத்தில் உள்ள நகைக் கடை உரிமையாளர்கள், ரியல் எஸ்டேட் தொழில் அதிபர்கள் மற்றும் நடிகர் ரஜினிகாந்த் ஆகியோரின் வீடுகளில், வருமான வரித் துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட வேண்டுமென கேட்டுக் கொண்டார்.

குறித்த மனுவை பெற்றுக்கொண்ட அலுவலர்கள் இந்த மனு மீதான நடவடிக்கை குறித்து கூடிய விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்துள்ளதாக கூறப்படுகிறது.

முன்னதாக நோட்டு விவகாரம் குறித்து ரஜினியின் ஆதரவு கருத்திற்கு இயக்குநர் அமீர் கடுமையாக விமர்சனத்தை எழுப்பி இருந்தது குறிப்பிடத்தக்கது.