சீரடி சாய்பாபாவுக்கு நடந்த அபிஷேகம்

நான் இருப்பது
நீ விரும்பிய கோரிக்கைகளை
நிறைவேற்றுவதற்கே!
அதில் எந்த ஒரு
சந்தேகமும் இல்லை!!

– சாய்பாபா

சாய்பாபா எந்த ஒரு பக்தனையும் கைவிட்டதாக வரலாறே இல்லை. கோடிக்கணக்கான பக்தர்களின் மனதில் அவர் ஊடுருவி அற்புதங்கள் பல புரிந்துள்ளார். அதில் கடுகளவுதான் வெளியில் நமக்கு தெரிந்துள்ளது. பல பக்தர்கள் கனவில் தோன்றி சாய்பாபா தமது சிறப்பை வெளிப்படுத்தியதுண்டு. சில பக்தர்கள் சீரடி பக்கமே செல்வதற்கு விருப்பம் இல்லாதவர்களாக அல்லது தெரியாதவர்களாக இருந்திருப்பார்கள். அவர்களையும் பாபா தம் அவதார மகிமையால் அரவணைத்து ஆசி வழங்கி வாழ்வில் உயர வைத்துள்ளார்.
அத்தகைய ஆசியைப் பெற்றவர்தான் மேகா. இவர் பிராமண வகுப்பைச் சேர்ந்தவர். ராவ்பகதூர் ஹரி விநாயக்ஸாடே என்பவரிடம் அவர் சமையல்காரராக பணிபுரிந்து வந்தார்.

இவர் தீவிர சிவ பக்தர். சிவனைத் தவிர வேறு எந்த கடவுளையும் வழிபட மாட்டார். சிவபெருமான் தொடர்பான புராணங்கள், சுலோகங்களை தெரிந்து வைத்திருக்கா விட்டாலும் சிவன் மீது அவருக்கு ஈடு இணையற்ற பக்தி இருந்தது.ஒருநாள் அவரை ராவ் பகதூர் ஹரிவிநாயக்ஸாடே அழைத்தார். “மேகா, நீ உடனே சீரடிக்குப் புறப்படு. அங்கிருக்கும் சாய்பாபாவை வணங்கி வழிபட்டு விட்டு வா” என்று உத்தரவிட்டார்.

முதலாளி சொல்லுக்கு எதிர்த்து பேசி பழக்கம் இல்லாத மேகாவும் உடனே புறப்பட்டு விட்டார். வழியில் சிலர் மேகாவை சந்தித்தனர். அவர்கள் மேகா மனதை மாற்றும் வகையில் பேசினார்கள். “சீரடியில் நீ நினைப்பது போல இந்து துறவி இருக்கவில்லை. அங்கு இருப்பது ஒரு முஸ்லிம்.பிராமணனான நீ எப்படி அவரை வணங்க முடியும்?” என்றனர்.

உடனே மேகா சீரடிக்கு செல்லாமல் திரும்பிச் சென்று விட்டார். சிறிது நாள் கழித்து ராவ்பகதூர் ஹரிவிநாயக் ஸாடே, சீரடி புறப்பட்டார். அவர் மேகாவிடம், “நான் சீரடி செல்கிறேன். மேகா நீயும் வா” என்று அழைத்தார். ஆனால் மேகா அதை ஏற்க மறுத்தார். “ஒரு முஸ்லிமை வழிபட என்னால் வர இயலாது” என்றார்.

அதற்கு ஹரி விநாயக் ஸாடே, “நீ நினைப்பது தவறு. அவர் அவதாரப் புருஷர். மும்மூர்த்தியும் அவரே. என் மூலம் அவர் உன்னை அழைக்கிறார். இந்த வாய்ப்பை தவற விடாதே” என்றார். மேகாவும் அரைகுறை மனதுடன் சீரடி புறப்பட்டார். சீரடியில் அவர் பாபாவைப் பார்ப்பதற்காக துவாரக மாயி மசூதி வாசலில் காலடி எடுத்து வைத்தார். பாபா அவரை கர்ஜிக்கும் வகையில் தடுத்து நிறுத்தினார்.
“ஏ… பிராமணனே நில். இந்த முகமதியனிடம் உனக்கு என்ன வேலை திரும்பிப் போ” என்றார். மேகா மசூதி படியில் இருந்து கீழே இறங்கி விட்டார்.

ஓரிரு நாட்கள் சீரடியில் இருந்த அவர் பிறகு திகியம்பகேஸ் வரம் சென்றார். ஆனால் மேகாவுக்குள் சாய்பாபா பற்றிய நினைவு அலை, அலையாக வந்து கொண்டே இருந்தது. என்ன செய்து பார்த்தும் மேகாவால் சாய்பாபாவை நினைக்காமல் இருக்க முடியவில்லை.
ஒரு கட்டத்தில் பாபாவே சீரடிக்கு தன்னை அழைப்பது போல மேகா உணர்ந்தார். அடுத்த நாளே சீரடிக்கு புறப்பட்டு வந்து விட்டார்.
தாதா பால்கேர் மூலம் அவர் பாபாவை அணுகினார். இந்த தடவை மேகாவைப் பார்த்த பாபா திட்டவில்லை. மாறாக முகம் மலர புன்னகைத்தப்படி வரவேற்றார்.

அந்த சமயத்தில் பாபா பார்த்த ஒரு பார்வை மேகாவுக்கு தீட்சை அளிப்பது போல இருந்தது. ஆம் அந்த நிமிடம் மேகா நயனதீட்சைப் பெற்றார். இதை உணர்ந்து மெய்சிலிர்த்த மேகா சற்று உன்னிப்பாக பாபாவைப் பார்த்தார். அடுத்த வினாடி அதிர்ச்சியில் உறைந்தார்.
அவரது கண்களுக்கு பாபா, சிவபெருமானாக மாறி காட்சி அளித்தார். மேகாவின் கைகள் அவரையும் அறியாமல் கூப்பி வணங்கின. கண்ணீர் மல்க அவர் பாபா காலடியில் விழுந்து வணங்கினார்.

அன்றே அவர் ஒரு தீர்க்கமான முடிவு எடுத்தார். இனி ஹரிவிநாயக் ஸாடேயிடம் திரும்பிச் செல்லக் கூடாது. இறுதி காலம் வரை சீரடியில் தங்கி இருந்து பாபாவுக்கு பணிவிடை செய்ய தன்னை அர்ப்பணித்துக் கொள்ள வேண்டும் என்று முடிவு செய்தார்.
அவரது முடிவை சாய்பாபாவும் ஏற்றுக் கொண்டு அனுமதி வழங்கினார். அன்று முதல் தினமும் பாபாவுக்கு சேவை செய்யும் பணியை மேகா தொடங்கினார்.

தினமும் அவர் வெகுதூரம் சென்று வில்வ இலைகளைப் பறித்து வந்து பாபா காலடியில் போட்டு பூஜை செய்வார். பாபாவை சந்திக்க வரும் முன்பு சீரடியில் உள்ள கண்டோபா கோவிலுக்கு சென்று வழிபடுவதையும் மேகா வழக்கத்தில் வைத்திருந்தார்.
ஒருநாள் அவர் கண்டோபா ஆலயத்துக்கு சென்றிருந்தபோது மூடிக்கிடந்தது. எனவே அங்கு வழிபாடு செய்யாமல் அவர் பாபாவிடம் புறப்பட்டு வந்தார்.

மசூதி வாசலிலேயே அவரை பாபா தடுத்து நிறுத்தினார். “முதலில் கண்டோபாவை வணங்கி விட்டு வா” என்றார். ஆச்சரியம் அடைந்த மேகா, கண்டோபா ஆலயத்துக்கு சென்றார். அங்கு ஆலயம் திறந்து இருந்தது. அப்போதுதான் அவர் கண்டோபாவும் பாபாவும் ஒன்றே. வேறு, வேறு அல்ல என்று உணர்ந்தார்.

பாபா, சிவனின் மறு அம்சம்தான் என்று மேகா மனதில் மேலும் ஆழமான நம்பிக்கை ஏற்பட்டது. எனவே சிவபெருமானுக்கு எப்படி அபிஷேக, ஆராதனை செய்வோமோ அதையெல்லாம் பாபாவுக்கு அவர் செய்தார். பாபாவிடம் அவர் தன் உடல், மனம், ஆவி அத்தனையையும் ஒப்படைத்து விட்டார். பாபாதான் உலகம் என்று பாபாவையே சுற்றி, சுற்றி வந்தார்.

ஒருநாள் மேகா நன்றாக அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த போது, அவர் கனவில் பாபா வந்தார். “உன் அறையில் வைத்துள்ள என் படம் பின்புறம் திரிசூலம் வரைந்து வழிபடு” என்றார். அதோடு அந்த படம் மீது அட்சதை தூவி ஆசீர்வதித்தார். காலையில் கண் விழித்த மேகா தனக்கு ஏற்பட்ட கனவு பற்றி நினைத்துப் பார்த்தார். பிறகு பாபா படம் உள்ள அறைக்கு சென்றார்.

அங்கு பாபா படம் முன்பு அட்சதைகள் சிதறிக் கிடப்பதை கண்டு ஆச்சரியப்பட்டார். உடனே நேரடியாக பாபாவிடம் சென்றார். கனவு பற்றி சொல்லி விளக்கம் கேட்டார். அதற்கு பாபா, “நான் என் பக்தனை பார்க்க வேண்டும் என்று நினைத்தால் எனக்கு எதுவும் தடையாக இருக்க முடியாது. எனக்கென்று உருவமோ, எந்த வடிவமோ கிடையாது. என்னால் எங்கும், எப்படியும், எப்போதும் தோன்ற முடியும்” என்றார்.

பாபா நிகழ்த்திய இந்த அற்புதத்தால் மேகா மேலும் நெகிழ்ந்து போனார். இந்த நிலையில் அவர் மனதுக்குள் ஒரு ஆசை ஏற்பட்டது.
கங்கையில் இருந்து புனித நீர் எடுத்து வந்து பாபாவுக்கு அபிஷேகம் செய்ய வேணடும் என்பதே அந்த ஆசை. மேகா தனது இந்த விருப்பத்தை பாபாவிடம் கூறினார். ஆனால் பாபா அதை ஏற்கவில்லை.

புனித நீர் எடுப்பதற்காக மேகா நீண்ட தொலைவுக்கு செல்ல வேண்டியதிருக்கும் என்று கருதி பாபா, அந்த கோரிக்கையை நிராகரித்து வந்தார். ஒரு தைப் பொங்கல் தினத்தன்று மேகா மிகுந்த அன்புடன் மீண்டும் அபிஷேகம் செய்ய அனுமதி கேட்டார்.
மேகாவைப் பார்த்து இரக்கம் கொண்ட பாபா, “சரி செய்து கொள்…” என்று அனுமதி வழங்கினார். உடனே மேகா கங்கை நீர் எடுத்து வர தடபுடலாக பிரமாண்ட ஏற்பாடுகள் செய்தார்.

சீரடியில் இருந்து சுமார் 28 கிலோ மீட்டர் தொலைவில் கோமதி ஆறு ஓடுகிறது. அதைத்தான் சீரடி பகுதி மக்கள் புனித கங்கையாகப் போற்றி வந்தனர்.

அங்கிருந்து குடங்களில் நீர் எடுத்து வரப்பட்டது. அவை குடம், குடமாக மசூதி முன்பு இறக்கி வைக்கப்பட்டது. ஒரு இடத்தில் பாபாவை அமரச் செய்தனர். அப்போது பாபா, மேகாவை பார்த்து, “என் தலையில் மட்டும்தான் நீ தண்ணீர் ஊற்ற வேண்டும். எந்த காரணம் கொண்டும் உடலில் தண்ணீர் ஊற்றக் கூடாது” என்றார்.

மேகாவும் சரி என்று கூறி விட்டு மேகா தலை மீது புனித நீரை ஊற்றி அபிஷேகம் செய்யத் தொடங்கினார். அடுத்த வினாடியே அவர் தன்னிலை மறந்து ஆனந்தமாகி விட்டார். பாபா மீது கொண்ட நிகரற்ற பக்தியால், பாசத்தால் அவர் புனித நீரை பாபாவின் தலையில் மட்டுமின்றி உடல் முழுவதும் ஊற்றி விட்டார். ஆனால் பாபா உடல் மீது ஒரு சொட்டு தண்ணீர் கூட படவில்லை.

தலையில் பட்டு எல்லா தண்ணீரும் தெறித்து ஓடின. குடம், குடமாக நீர் ஊற்றியும் பாபா உடல் நனையாதது கண்டு அங்கு திரண்டிருந்த பக்தர்கள் மகிழ்ச்சியால் சத்தமிட்டனர். அப்போதுதான் மேகா உணர்வுக்குத் திரும்பினார்.

பாபாவின் தலை மட்டுமே நனைந்திருப்பது கண்டு அவரும் ஆச்சரியம் அடைந்தார். பாபா எதுவும் நடக்காதவர் போல புன்னகை ததும்ப அமர்ந்திருந்தார். மேகா அவர் கால்களில் விழுந்து தன்னை மன்னிக்கும்படி அழுது புரண்டார். அவரைத் தொட்டு தூக்கிய பாபா, “பயப்படாதே, இது பக்தி பிரவாகத்தால் வந்தது. உன் மீது எந்த தவறும் இல்லை” என்று ஆசீர்வதித்தார்.

இந்த சம்பவத்துக்குப் பிறகு பாபாவின் நிழலாக திகழ்ந்த பக்தர்களில் ஒருவராக மேகா மாறினார். அந்த காலக் கட்டத்தில் பாபாவுக்கு வழிபாடு செய்வது என்றால் அதை மேகா செய்தால்தான் சிறப்பாகவும், முழுமையாகவும் இருக்கும் என்ற நிலை ஏற்பட்டது. அதனால் தான் எத்தனையோ பக்தர்கள் சீரடியே கதி என்று கிடந்த போதும், தனக்கு ஆரத்தி எடுக்கும் உரிமையை மேகாவுக்கு பாபா வழங்கினார். முதன் முதலாக நூல்கர் என்பவர்தான் பாபாவுக்கு ஆரத்தி காட்டி வந்தார். அவர் மறைவுக்கு பிறகு அந்த உரிமை மேகாவுக்கு கிடைத்தது.

பாபாவுக்கு அவர் ஒவ்வொரு தடவை ஆரத்தி காட்டும் போதும் சிவபெருமானுக்கு ஆரத்தி காட்டுவது போல காட்டுவாராம். மேலும் ஆரத்தி காட்டும் போது பாபாவை நோக்கி ஒற்றைக் காலில் நின்று கொண்டு, தலையை அங்கும், இங்கும் அசைக்காமல் ஆரத்தி காட்டுவாராம்.

1912-ம் ஆண்டு மேகா மறைந்தார். அப்போது பாபா கண்ணீர் விட்டு அழுதார். மேகா உடலை தடவி விட்டார். அது மட்டுமின்றி மேகா உடல் எடுத்துச் செல்லப்பட்ட போது சிறிது தூரம் உடன் நடந்து சென்றார். பாபா தம் வாழ்நாளில் எந்த ஒரு பக்தனுக்கும் இந்த சிறப்பைக் கொடுத்தது இல்லை.

அதனால்தான் மேகாவை ஈர்த்து பாபா நடத்திய அற்புதங்கள் இன்றும் பேசப்படுகிறது. அது போல பாபா செய்யும் சமையல் மிகவும் சிறப்பு வாய்ந்தது. அதுபற்றி அடுத்த வாரம்வியாழக்கிழமை காண்போம்.