உத்தரப் பிரதேசத்தில் இரண்டாயிரம் ரூபாய் மாற்றச் சென்ற மூதாட்டிக்கு 17 கிலோ நாணயங்களை சில்லரையாக வழங்கிய வங்கியின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்திரப் பிரதேசத்தின் மவுரவா பகுதியைச் சேர்ந்தவர் சர்ஜூ தேவி. இவருக்கு ராம்குமார் என்ற மகன் உள்ளார். அவருக்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
ராம்குமாருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதால் பணம் தேவைப்படும் என்பதற்காக அவரின் தாய் அருகில் உள்ள வங்கிக்கு தன்னிடம் இருந்த 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கு சென்றுள்ளார்.
அப்போது அங்கிருந்த வங்கி கேஷியரான பெண் ஒருவர் அவருக்கு 2000 ரூபாய் மாற்றியதற்கு பதிலாக 17 கிலோ அளவிற்கு 1 ரூபாய் நாணயங்களை கொடுத்ததாக கூறப்படுகிறது.
ஆனால் அவரோ இதை தான் தன் மகனின் சிகிச்சைக்காக மருத்துவர்களிடம் கொடுக்க வேண்டும், சில்லரையாக கொடுத்தால் அவர்கள் வாங்கமாட்டார்கள் என கெஞ்சியுள்ளார்.
ஆனால் வங்கி கேஷியரோ இதை காதில் வாங்காதது போல் இருந்துள்ளார். சுமார் 17 கிலோ எடை கொண்ட அந்த நாணய மூட்டைகளை சுமக்க முடியாததால் தன்னுடைய மகனை தேவி உதவிக்கு அழைத்து எடுத்து சென்றுள்ளார்.
மேலும் இந்த சில்லறையை யாரும் பெற்றுக் கொண்டு பணம் வழங்க முன் வராததால், கையில் பணம் இல்லை. அதனால் மகனின் சிகிச்சைக்கு வழியின்றி தவிக்கிறேன் என்று தேவி மனவருத்ததுடன் கூறியுள்ளார்.