அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுவரும் முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஒரு நாளைக்கு 20 மணி நேரத்துக்கு அதிகமாக இயல்பாக மூச்சு விடுகிறார் என்றும் தூங்கும் நேரத்தில் மட்டுமே செயற்கை சுவாசம் அவருக்கு அளிக்கப்பட்டு வருவதாகவும் டாக்டர்கள் தெரிவித்து உள்ளனர்.
அவர் வேகமாக குணமடைந்து வருவதாகவும், இந்த நல்ல முன்னேற்றம் காரணமாக (சனிக்கிழமை) அவர் தனி வார்டுக்கு மாற இருப்பதாக கூறப்படுகிறது. அதேவேளையில் செயற்கை சுவாசத்தை முழுமையாக நிறுத்திவிடலாமா? என்றும் டாக்டர் குழு ஆலோசித்து வருகிறது.
இதனால் அ.தி.மு.க.வினர் உற்சாகம் அடைந்து உள்ளனர். ஏற்கனவே ஆஸ்பத்திரி முன்பு சிறப்பு பிரார்த்தனைகளில் ஈடுபட்டும், ஆஸ்பத்திரி வாசலே சரணாகதி என்று காத்திருக்கும் அ.தி.மு.க.வினர் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கி மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர். ஆஸ்பத்திரி வாசலில் தண்ணீர் பந்தல் அமைத்து, அங்கு மோர், வெள்ளரி, கேரட் உள்ளிட்டவைகளை நோயாளிகள் மற்றும் பார்வையாளர்களுக்கு இலவசமாக வழங்கி வருகின்றனர்.
தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலை விசாரிப்பதற்காக மகாராஷ்டிரா மாநிலம் சயான் கோலிவாடா தொகுதி பா.ஜ.க. எம்.எல்.ஏ. ஆர்.தமிழ்ச்செல்வன் நேற்று அப்பல்லோ ஆஸ்பத்திரிக்கு வந்தார்.
பின்னர் ஆஸ்பத்திரியில் இருந்து வெளியே வந்த அவர் நிருபர்களிடம் கூறுகையில், “தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து ஆஸ்பத்திரி டாக்டர்களிடம் கேட்டறிந்தேன். அவர்கள் கூறிய பதில் திருப்தி அளிக்கிறது. தீவிர சிகிச்சை காரணமாக அவரது உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு உள்ளது. அவர் நன்றாக உள்ளார். அவர் விரைவில் நலமுடன் வெளியேறி தமிழகத்துக்கு பல நன்மைகளை நிச்சயம் செய்வார்”, என்றார்.
அ.தி.மு.க. செய்தி தொடர்பாளர் சி.ஆர்.சரஸ்வதி கூறுகையில், “முதல்-அமைச்சர் குணமடைந்து வருவது தமிழக மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தேர்தல் பிரசாரத்துக்கு செல்லும் இடமெல்லாம் ‘அம்மா’வின் உடல் நலத்தை அனைவரும் விசாரிக்கின்றனர். அவர் மறுபிறவி எடுத்துள்ளது அனைவரையும் மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியுள்ளது.’, என்றார்.
அப்பல்லோ ஆஸ்பத்திரிக்கு சென்றுவிட்டு வெளியே வந்த முன்னாள் அமைச்சரும், அ.தி.மு.க. அமைப்பு செயலாளருமான சி.பொன்னையன் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா வேகமாக குணமடைந்து வருகிறார். அவர் கையெழுத்திட்டு வெளியிட்ட அறிக்கை பொதுமக்களிடம் பெரியளவில் உத்வேகத்தை ஏற்படுத்தியதுடன், கட்சியினரை அளப்பரிய களப்பணியில் ஈடுபடுத்த தூண்டியிருக்கிறது. எனவே நடைபெறும் தேர்தல்களில் ‘அம்மா’ மகத்தான வெற்றி பெறுவது உறுதி. இறைவன் அவருக்கு கொடுத்துள்ள இந்த புனர்வாழ்வு தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.