பொறியியல் மாணவிக்கு மருத்துவரால் ஏற்பட்ட பரிதாப நிலை!… பரபரப்பை ஏற்படுத்திய அதிர்ச்சி சம்பவம்!

தமிழகம் , நீலகிரி மாவட்டதில் தவறான சிகிச்சை அளித்த மருத்துவரால் பொறியியல் மாணவி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடயே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நீலகிரி மாவட்டம் குன்னூர் குயின்ஹில் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ். இவரது மகள் கவிதா(25). கோவையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் 2ம் ஆண்டு படித்து வந்தார்.

இவருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டதால் கடந்த ஒன்றரை மாதங்களுக்கு முன் குன்னூர் மவுன்ட்ரோடு பகுதியில் உள்ள முரளிதரன் என்ற மருத்துவரிடம் சிகிச்சை பெற்றார்.

தவறான சிகிச்சையால் அவருக்கு தோல் அரிப்பு ஏற்பட்டதுடன், தலைமுடி உதிர துவங்கி, கண்பார்வையும் பாதிக்கப்பட்டது.

உடலின் நிறமும் மாறிவிட்டது. இதையடுத்து அவர் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

இதுதொடர்பாக, அவரது பெற்றோர் கொடுத்த புகாரின்பேரில் குன்னூர் தாசில்தார் ஜான்மனோகரன் முன்னிலையில் கடந்த 3 வாரத்துக்கு முன் பேச்சுவார்த்தை நடந்தது.

இதில் மருத்துவர் முரளிதரன், மருத்துவ சங்க நிர்வாகி கவுதமன் மற்றும் அப்பெண்ணின் பெற்றோர் பங்கேற்றனர். அப்போது, மருத்துவசெலவில் குறிப்பிட்ட தொகையை ஏற்றுக் கொள்வதாக முரளிதரன் தெரிவித்தார்.

இந்தநிலையில், மருத்துவமனையில் கவிதா சிகிச்சை பலனின்றி நேற்று காலை உயிரிழந்தார்.

இதனால் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர்.மருத்துவரின் அலட்சியத்தால் சிகிச்சை பெற்று வந்த கவிதா இறந்து போனது அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுதொடர்பாக மேல்குன்னூர் காவற்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து குன்னூர் மவுன்ட்ரோட்டில் உள்ள மருத்துவர் முரளிதரனின் மருத்துவமனை மூடப்பட்டது.

கவிதாவின் உடலை கோவையில் இருந்து குன்னூருக்கு உறவினர்கள் கொண்டு சென்றனர்.

பகல் 2 மணியளவில் பர்லியார் அருகே மருத்துவ ஊர்தியை காவற்துறையினர் திடீரென மறித்து, கவிதா இறப்பு குறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதால் பிரேத பரிசோதனைக்கு பின்னரே உடலை அடக்கம் செய்ய வேண்டும் என்று கூறினர்.

இதற்கு, குன்னூர் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்து கொள்கிறோம் என்று பிடிவாதம் பிடித்தனர்.

சுமார் 2 மணி நேர பேச்சுவார்த்தைக்குபிறகு கவிதாவின் உடல் கோவை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்வதற்காக அனுப்பி வைக்கப்பட்டது.