இலங்கை காணி ஆணையாளர் ஆர்.பீ.அர். ராஜபக்சவை பணி நீக்கம் செய்ய தீர்மானிக்ப்பட்டுள்ளது.
உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் காணி ஆணையாளரின் பணி நீக்கப்படுவதாக பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது.
தற்போதைய காணி ஆணையாளர் தமது பணிகளை உரிய முறையில் ஆற்றுவதில்லை என பிரதமர் அலுவலகத்திற்கு பெரும் எண்ணிக்கையிலான முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன.
பணியொன்றை பூர்த்தி செய்வதற்காக ஐக்கிய தேசியக் கட்சியின் இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் காணித் திணைக்களத்திற்கு நேற்று சென்றிருந்த போது காணி ஆணையாளர் அந்த நாடாளுமன்ற உறுப்பினர்களை கண்டுகொள்ளவில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்த விடயம் குறித்து கம்பஹா மற்றும் பதுளை மாவட்டங்களை பிரதிநிதித்துவம் செய்யும் குறித்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதமர் அலுவலகத்திடம் முறைப்பாடு செய்துள்ளனர்.
ஏற்கனவே அரசாங்க அதிகாரிகள் சிலரை காணி ஆணையாளர் உதாசீனம் செய்திருந்தார் என முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
தமது பணிகளை உரிய முறையில் செய்யவில்லை என பொதுமக்கள் காணி ஆணையாளர் மீது சுமத்தி வரும் பல்வேறு குற்றச்சாட்டுக்களை கருத்திற் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
எனவே காணி ஆணையாளரை பணி நீக்கி ஒழுக்காற்று விசாரணை நடத்த பிரதமர் அலுவலகம் தீர்மானித்துள்ளது.
இந்த விடயம் குறித்து காணி அமைச்சிற்கு உடனடியாக அறிவிக்கப்படும் என பிரதமர் அலுவலக பேச்சாளர் ஒருவர் கொழும்பு ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.