தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே காதலிக்க மறுத்த 10-ஆம் வகுப்பு பள்ளி மாணவியை, கல்லூரி மாணவன் ஒருவன் சரிமாரியாக கத்தியால் குத்திய சம்பவம் நடந்துள்ளது. தலைமறைவாக உள்ள அந்த மாணவனை பொலிசார் தேடி வருகின்றனர்.
ஆண்டிப்பட்டி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் படித்து வருகிறார் இராஜகோபாலன்பட்டியை சேர்ந்த ஹேமா(பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவரை தனியார் கல்லூரியில் முதலாமாண்டு படிக்கும் நவீன் என்ற மாணவன் ஒருதலையாக காதலித்து வந்துள்ளார்.
மாணவியை பின் தொடர்ந்தும், காதலிக்க வற்புறுத்தியும் பல நாட்களாக தொந்தரவு கொடுத்து வந்துள்ளார் நவீன். இந்நிலையில் சம்பவம் நடந்த அன்று மாலை பள்ளியில் இருந்து வீடு திரும்பிய மாணவியை நவீன் இராஜகோபாலன்பட்டி பேருந்து நிறுத்தம் அருகே வழி மறித்துள்ளார்.
தன்னை காதலிக்குமாறு மீண்டும் வலியுறுத்திய நவீனிடம் நான் படிக்க வேண்டும் என்ன விட்டுவிடு, உன்னை காதலிக்க முடியாது என கூறியுள்ளார் அந்த மாணவி. இதனால் ஆத்திரமடைந்த மாணவன் நவீன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் அந்த மாணவியை சரமாறியாக குத்திவிட்டு தப்பித்து ஓடியுள்ளார்.
இதனால் நிலைகுலைந்த அந்த மாணவி இரத்த வெள்ளத்தில் கிடந்தார். இதனையடுத்து அங்கிருந்தவர்கள் மாணவியை உடனடியாக மருத்துவமனையில் சேர்த்து தீவிர சிகிச்சை அளித்தனர். மாணவியின் தாய் அளித்த புகாரின் அடிப்படையில் தலைமறைவாக உள்ள மாணவன் நவீன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிரமாக தேடி வருகின்றனர்.