இந்திய விக்கெட் கீப்பர் விருத்திமான் சஹாவுக்கு (3 ரன்), சுழற்பந்து வீச்சாளர் மொயீன் அலி வீசிய பந்து காலுறையில் (பேடு) பட்டதும் சில வினாடி யோசனைக்கு பிறகு நடுவர் தர்மசேனா விரலை உயர்த்தினார். இதையடுத்து டி.ஆர்.எஸ். தொழில்நுட்பத்தின்படி சஹா முறையிட்டார். ரீப்ளேவுக்கு பிறகு அது கச்சிதமான எல்.பி.டபிள்யூ. என்று தீர்ப்பு வழங்கப்பட்டது.
அடுத்த 2-வது பந்தில் ரவீந்திர ஜடேஜாவுக்கும் இதே போன்று பந்து காலுறையில் தாக்கியதும் நடுவர் எல்.பி.டபிள்யூ. வழங்கினார். உடனே ஜடேஜா, அப்பீல் செய்யலாமா என்று எதிர்முனையில் நின்ற அஸ்வினிடம் கேட்டார். அதற்கு அஸ்வின், சரியான எல்.பி.டபிள்யூ. போன்று தெரிவதாக கூறியதால் ஜடேஜா அத்துடன் வெளியேறினார். ஆனால் ரீப்ளேயில் பந்து லெக்-ஸ்டம்பை விட்டு விலகுவது தெளிவாக கண்டறியப்பட்டது. அப்போது இந்தியாவுக்கு ஒரு டி.ஆர்.எஸ். வாய்ப்பும் பாக்கி இருந்தது. அப்பீல் செய்திருந்தால் ஜடேஜா, ‘நாட்-அவுட்’ ஆகியிருப்பார்.
இங்கிலாந்து அணி 5 விக்கெட்டுகளை இழந்து ஊசலாடிக்கொண்டிருந்த சமயத்தில், பென் ஸ்டோக்சும் வந்த வேகத்தில் நடையை கட்டி இருக்க வேண்டியது. அவர் 3 ரன்னில் ஆடிக்கொண்டிருந்த போது சுழற்பந்து வீச்சாளர் ஜெயந்த் யாதவ் வீசிய பந்து ஆப்-ஸ்டம்பு மீது இருந்த பெய்ல்ஸ் மீது பட்டது. ஆனால் பெய்ல்ஸ் கீழே விழவில்லை. இந்த அதிர்ஷ்டத்தால் தொடர்ந்து பேட் செய்யும் வாய்ப்பை பெற்றார்.