புதிய அதிபர் டொனால்டு டிரம்புடன் இணைந்து பணியாற்றுங்கள் என்று ஐரோப்பிய நாடுகளின் தலைவர்களுக்கு அதிபர் பராக் ஒபாமா வலியுறுத்தி உள்ளார்.
அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் பதவிக் காலம் அடுத்த மாதத்துடன் முடிவடைகிறது. வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறும் முன்பாக பல்வேறு உலக நாடுகளின் தலைவர்களை இறுதியாக அவர் பார்த்து வருகின்றார்.
இதனிடையே கடந்த புதன்கிழமை ஐரோப்பிய நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டார். பயணத்தின் முக்கிய பகுதியாக ஜெர்மனி சென்ற அவர் அந்நாட்டு அதிபர் ஏஞ்சலே மெர்கலை சந்தித்தார்.
மேலும், பிரிட்டன், இத்தாலி, பிரான்ஸ், ஸ்பெயின் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளின் முக்கிய தலைவர்களை அதிபர் பராக் ஒபாமா சந்தித்து பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை செய்தார்.
இந்நிலையில், புதிய அதிபர் டொனால்டு டிரம்புடன் இணைந்து பணியாற்றுங்கள் என்று ஐரோப்பிய நாடுகளின் தலைவர்களுக்கு அதிபர் பராக் ஒபாமா வலியுறுத்தி உள்ளார்.
இது தொடர்பாக வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில், அமெரிக்காவும், ஐரோப்பாவும் திறந்தநிலை ஜனநாயக நாடுகளாக இருப்பதால இணைந்து செயலாற்ற வேண்டும் என்று அவர் கூறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனது பயணத்தின் போது சிரியா உள்நாட்டு போர் மற்றும் கிழக்கு உக்ரைன் விவகாரங்களில் எடுக்க வேண்டிய உடனடி நடவடிக்கைகள் குறித்தும் ஐரோப்பிய தலைவர்களுடன் ஆலோசனை செய்தார்.
இதனையடுத்து தனது இறுதியான ஐரோப்பிய நாடுகளின் பயணத்தை முடித்து கொண்டு ஒபாமா தாயகம் திரும்பினார்.