குறிப்பிட்ட உணவை உட்கொண்டால், உடல் எடை குறைகிறது என்பதற்காக, அந்த உணவை உட்கொள்ளுவது நல்லது அல்ல. ஆரோக்கியமான டயட் மூலம்தான், உடல் எடையைக் குறைக்க வேண்டும். உடல் எடை குறைய, தனியாக உணவுகள் சாப்பிடுவதைவிட, எடை அதிகரிக்கச் செய்யும் சில உணவு வகைகளை, தவிர்ப்பதன் மூலமும் குறைத்துக்கொள்வதன் மூலமும் உடல் எடையைக் குறைக்க முடியும்.
உண்ணும் உணவில் கார்போஹைட்ரேட் 50 சதவிகிதம் மட்டுமே இருக்க வேண்டும். கீரைகள், நட்ஸ், பழங்கள், காய்கறிகள், ஊட்டச்சத்து நிறைந்த ஆரோக்கியமான உணவுகள் என, சமச்சீரான உணவு உட்கொள்வது அவசியம்.
காலையில் கட்டாயம் சாப்பிட வேண்டும். காலை இரண்டு – மூன்று இட்லி, நிறைய சாம்பார் சேர்த்துச் சாப்பிடுவது நல்லது. காலையில் அதிக அளவு உண்ணுவதோ, அறவே உணவைத் தவிர்ப்பதோ கூடாது. காலையில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை உட்கொள்வது அவசியம். காலையில் பால், முளைகட்டிய பயறு வகைகள், பழங்கள், எளிதில் செரிமானமாகும் கார்போஹைட்ரேட் உணவுகளை உட்கொள்வது அவசியம்.
மதிய உணவுக்கு ஒரு கப் சாதம் (200 கி), ஒரு கப் சாம்பார், ஒரு கப் ரசம், அரை கப் தயிர், இரண்டு கப் காய்கறிகள் சாப்பிட வேண்டும். ஊறுகாய், அப்பளம் போன்றவற்றைத் தவிர்ப்பது நல்லது.
இரவு வேளையில் பரோட்டா, நூடுல்ஸ் முதலான மைதா உணவுகளைத் தவிர்க்க வேண்டும். எண்ணெய் குறைவாகச் சேர்க்கப்பட்ட சப்பாத்தி இரண்டு, காய்கறிக் கூட்டு ஆகியவற்றை எடுத்துக்கொள்ள வேண்டும். உணவை மூன்று வேளைகளாகச் சாப்பிடுவதற்குப் பதிலாக, ஆறு வேளைகளாகப் பிரித்துச் சாப்பிடவும்.
அரிசி சாதத்தைப் பார்த்தால், அதிக அளவு சாப்பிட்டுவிடுகிறேன் என வருந்துபவர்கள், சப்பாத்தி சாப்பிடலாம். அரிசி சாதத்தில் கார்போஹைட்ரேட் அதிகமாக இருப்பதால், அதிகம் சாப்பிடத் தோன்றும். இடித்த கோதுமையில் இரண்டு சப்பாத்தி சாப்பிட்டாலே உடலுக்குத் தேவையான கார்போஹைட்ரேட் மற்றும் நார்ச்சத்து கிடைத்துவிடும். சப்பாத்தி சாப்பிட்டால் எடை குறையாது, பசி சீக்கிரம் அடங்கும் என்பதை உணர வேண்டும். சிலர், சப்பாத்தி சாப்பிட்டால் எடை குறையும் என நினைத்துக்கொண்டு 5-6 சப்பாத்தி சாப்பிடுவார்கள். இது தவறானது.
பொங்கல், பூரி, பரோட்டா, மசால் தோசை, பிரியாணி, எண்ணெயில் வறுத்த உணவுகள், அதிக அளவு மசால் சேர்க்கப்பட்ட அசைவ உணவுகள் போன்றவற்றை அடிக்கடி சாப்பிடக் கூடாது. 10- 15 நாட்களுக்கு ஒரு முறை மட்டும் அளவாகச் சாப்பிடுவது நல்லது.
ஒவ்வொரு வேளையும் சாப்பிடுவதற்குக் குறைந்தபட்சம் 20 நிமிடங்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். சாப்பிடும்போது பேசிக்கொண்டோ, டி.வி பார்த்துக்கொண்டோ, புத்தகம் படித்துக்கொண்டோ சாப்பிடக் கூடாது. குடும்பத்தோடோ, நண்பர்களோடோ அமர்ந்து, பொறுமையாக உணவை ரசித்துச் சாப்பிடவேண்டும். சாப்பிடும்போது நன்றாக மென்று சாப்பிட வேண்டும். இடையிடையில் தண்ணீர், கோலா பானங்கள், ஜூஸ் போன்றவற்றை அருந்தக் கூடாது. உணவு சாப்பிட்ட பின்னர், அரை மணி நேரம் கழித்துத் தண்ணீர் அருந்தவும்.
சாப்பிடும்போது தண்ணீர் குடித்தால், செரிமானம் தாமதமாகும். இதனால், இரைப்பை சற்றே பெரிதாகும் என்பதை நினைவில் வையுங்கள்.
டயட் என்பது ஆரோக்கியம் நிறைந்த சமச்சீரான உணவுகளை உட்கொள்வதே ஆகும். டயட் என்ற பெயரில் உணவை தவிர்க்கவோ, கூடுதலாக ஏதேனும் உணவை எடுத்துக்கொள்ளவோ கூடாது.