பூமி பூஜை செய்வதற்கு உரிய வாஸ்து நாள்

எந்த ஒரு கட்டமைப்பாக இருந்தாலும் பூமி பூஜை செய்யப்பட்ட பிறகுதான் கட்டுமான வேலைகள் தொடங்குகின்றன. பூமி பூஜை என்பது வெறும் நம்பிக்கை சார்ந்த விஷயம் என்றுதான் பலரும் கருதுகிறார்கள். ஆனால், கட்டுமான பணிகள் எதுவாக இருந்தாலும், ஏதாவது ஒரு நாளில் வெறுமனே அஸ்திவாரம் எடுக்க ஆரம்பித்து கட்டுமான வேலைகளை தொடங்கி யாருமே செய்வதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பூமிக்கும் உயிர் உண்டு :

பூமியை உயிருள்ள பொருளாக கருதுவதால் அதன்மேல் கட்டப்படும் கட்டுமானங்கள் அனைத்தும் அந்த உயிர்த்தன்மையை கிரகித்து அதற்குரிய பலன்களை தருவதாக வாஸ்து சாஸ்திரம் குறிப்பிடுகிறது. பூமியில் செயல்படும் அந்த உயிர்த்தன்மையானது எந்தெந்த காலங்களில் நமக்கு பலன் தரும் விதத்தில் பூரண சக்தியுடன் இருக்கிறது என்பது பல்வேறு கால கணக்குகளுக்கு உட்பட்டு முன்னோர்களால் கணிக்கப்பட்டுள்ளது.

சிறப்பு கணித முறை :

அந்த கணித முறைகள், நவகிரகங்களை அடிப்படையாக கொண்ட வழக்கமான ஜோதிட ரீதியான கணக்குகளை அடிப்படையாக கொண்டவை அல்ல. பூமியில் சில குறிப்பிட்ட காலத்துக்கு மட்டும் விஷேசமாக இருக்கும் புவி ஆகர்ஷண சக்தியை பிரதானமாக கொண்டதாகும். அந்த ஆகர்ஷண சக்தியை வாஸ்து புருஷனாக உருவகம் செய்து விழிப்பு, உணவு உண்ணுதல், தாம்பூலம் தரித்தல் மற்றும் உறக்கம் போன்ற செயல்களின் அடிப்படையில் குறிப்பிட்ட காலம் கணிக்கப்பட்டுள்ளது. அப்படிப்பட்ட காலங்கள் ஒரு வருடம் முழுவதற்கும் எட்டு வாஸ்து விழித்தெழும் நாட்களாக அடையாளம் காணப்பட்டு உள்ளன.

எட்டு நாட்கள் மட்டும் :

அதாவது மொத்தமுள்ள பன்னிரெண்டு தமிழ் மாதங்களில் எட்டு மாதங்கள் மட்டுமே அந்த கணக்கில் வருகின்றன. அந்த எட்டு மாதங்களில் வரும் குறிப்பிட்ட ஒரு நாளில் வரக்கூடிய குறிப்பிட்ட நேரமானது வாஸ்து விழித்தெழும் நாளாக குறிப்பிடப்படுகிறது. அந்த நாட்கள் எல்லா காலங்களிலும், எவ்விதமான சிறு மாற்றங்கள்கூட இல்லாமல் குறிப்பிட்ட ஒரு தமிழ் தேதியில் மட்டும்தான் வரும். பொதுவாக ஜோதிட வழக்கான நாழிகையில் அந்த நேரங்கள் குறிப்பிடப்படும். எளிதாக கடைப்பிடிப்பதற்கு ஏற்றவாறு ஆங்கில மணி மற்றும் நிமிடத்தில் இங்கே அது குறிப்பிடப்பட்டுள்ளது.

என்றும் மாறாதது :

வாஸ்து நாட்களுக்கான மாதம், நாள் மற்றும் நேரம் போன்ற விபரங்கள் எல்லா வருடங்களிலும் நிலையானதாக இருக்கும். இந்த நாட்களுக்கு வாரம், திதி, நட்சத்திர தோஷம் போன்றவை கிடையாது. அந்த நாட்களில் வாஸ்து புருஷன் 90 நிமிடங்கள் விழித்திருந்து ஒவ்வொரு 18 நிமிடங்களிலும் பல் துலக்குதல், ஸ்நானம் செய்தல், பூஜை செய்தல், உணவு உண்ணுதல், வெற்றிலை போடுதல் ஆகியவற்றை செய்துவிட்டு மீண்டும் நித்திரைக்கு செல்வதாக ஐதீகம். வாஸ்து புருஷன் உணவு உண்ணும் நேரத்திலும், வெற்றிலை போடும் (தாம்பூல தாரணம்) நேரத்திலும் அவருக்கு பூஜை செய்து வீடு கட்ட ஆரம்பித்தால் தடைகள் எதுவுமில்லாமல் வீடு கட்ட முடியும் என்பது பெரும் நம்பிக்கையுடன் பலராலும் கடைபிடிக்கப்பட்டு வரும் நடைமுறையாகும்.

இந்த மாதம் வரக்கூடிய வாஸ்து நாள் :

வருகிற 23-11-2016 புதன்கிழமை அன்று (கார்த்திகை மாதம் 8-ம் நாள்) காலை 11.07 முதல் 11.43 வரையில் உள்ள காலம் வாஸ்து நேரமாகும். இந்த நேரமானது அன்றைய சென்னை சூரிய உதயத்தை கணக்கில் கொண்டு வாஸ்து புருஷனின் போஜனம் மற்றும் தாம்பூல தாரண நேரத்தை குறிப்பிடக்கூடியதாகும். மற்ற ஊர்களை பொறுத்தவரை அந்த இடங்களுக்கான சூரிய உதயத்தை கணக்கில் கொண்டு வாஸ்து நேரத்தை நிர்ணயம் செய்து கொள்ள வேண்டும் என்பது கவனிக்கத்தக்கது.