புதிய கட்சியின் தலைமைப் பொறுப்பினை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச ஏற்றுக்கொண்டால், கூட்டு எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் பலர் மீளவும் சுதந்திரக்கட்சியில் இணைந்து கொள்வார்கள் என சுதந்திரக் கட்சியின் இளைஞர் முன்னணியின் தலைவர் சாந்த பண்டார தெரிவித்துள்ளார்.
வார இறுதி பத்திரிகை ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் தொடர்ந்தும் கூறுகையில்…
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி கட்சியின் தலைவர் பதவியை ஏற்றுக்கொண்டால், அவருடன் எதிர்க்கட்சியில் இருக்கும் பல உறுப்பினர்கள் சுதந்திரக் கட்சியில் இணைந்து கொள்வார்கள்.
அரசாங்கத்திற்கு ஆதரவளிப்பதாக இந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஏற்கனவே உறுதியளித்துள்ளனர்.
மஹிந்த ராஜபக்சவின் வழிகாட்டல்களின் அடிப்படையிலேயே புதிய கட்சி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
எனினும் இந்த நடவடிக்கைக்கு கூட்டு எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் பெரும் எண்ணிக்கையிலான சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பிளவடையச் செய்யும் நோக்கில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி உருவாக்கப்பட்டுள்ளது.
எனவே, கூட்டு எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதியுடன் இணைந்து சுதந்திரக் கட்சியை வலுப்படுத்த அர்ப்பணிப்புடன் இணைந்து கொள்வார்கள்.
எதிர்வரும் நாட்களில் மஹிந்தவுடன் இணைந்திருக்கும் உள்ளுராட்சி மன்றங்கள் மற்றும் மாகாணசபைகளின் பிரதிநிதிகளையும் சுதந்திரக் கட்சியில் இணைத்துக்கொள்ளும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.